தேவாரம் பேரூராட்சி செயல் அலுவலர் பணி நீக்கம்
தேவாரம் பேரூராட்சி செயல் அலுவலரை பணி நீக்கம் செய்து பேரூராட்சிகள் இயக்குனர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேனி மாவட்டம், தேவாரம் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றுபவர் குலோத்துங்கன். இவர் கடந்த ஆண்டு தேவாரம் பேரூராட்சி செயல் அலுவலராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார்.
அதற்கு முன்பு சேலம், கரூர் மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் செயல் அலுவலராக பணியாற்றியுள்ளார். அப்போது அவர் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது. அந்த குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தது.
உயர்மட்ட அதிகாரிகள் சார்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு அதுகுறித்த அறிக்கைகள் பேரூராட்சிகள் இயக்குனருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் செயல் அலுவலர் குலோத்துங்கனை பணி நீக்கம் செய்து பேரூராட்சிகள் இயக்குனர் கிரண் குராலா உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணி நீக்கம் செய்ததற்கான காரணங்கள் குறித்து கேட்டபோது, பேரூராட்சி அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்ட குலோத்துங்கன் இன்னும் சில மாதங்களில் பணி ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.