ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் பணி நீக்கம்:போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியை மீண்டும் வழங்கக்கோரி வசந்தி வழக்கு- அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் தன்னை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் மீண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியை வழங்க கோரியும் வசந்தி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Update: 2023-06-06 21:02 GMT


ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் தன்னை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் மீண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியை வழங்க கோரியும் வசந்தி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்ஷத் என்பவரிடம், மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த வசந்தி, ரூ.10 லட்சம் பறித்ததாக கடந்த 2021-ம் ஆண்டில் கைதானார். இதையடுத்து சமீபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து அவரை நீக்கி தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தன்னை பணி நீக்கம் செய்து ஐ.ஜி. பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துவிட்டு, மீண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று வசந்தி, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அவர் கூறியிருந்ததாவது:-

நான் மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது, கடந்த 5.7.2021 அன்று சிலர் அந்த பகுதியில் கள்ள நோட்டுகளை மாற்றுவதாக தகவல் கிடைத்தது. இதுதொடர்பான விசாரணை நடவடிக்கை எடுத்தேன். ஆனால் சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து, நான் ரூ.10 லட்சம் பறித்ததாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் என் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து என்னை கைது செய்தனர்.

வாய்ப்பளிக்கவில்லை

இந்த வழக்கில் எனக்கு மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் அளித்தது. ஜாமீன் நிபந்தனையின்படி என்னால் மதுரையை விட்டு வெளியேற முடியவில்லை. இதனால் நான் விருதுநகரில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக முடியவில்லை. இருப்பினும் என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அடங்கிய கடிதத்தை அனுப்பினேன்.

இதற்கிடையே என்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து நீக்கி மேல் அதிகாரிகள் உத்தரவிட்டனர். பணி நீக்க உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக, என் மீதான புகார் குறித்து நான் விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே என்னை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

பதில் அளிக்க உத்தரவு

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்