மசினகுடி பகுதியில் பாகற்காய் கொடிகளில் நோய்தாக்குதல்;விவசாயிகள் கவலை

மசினகுடி பகுதியில் பாகற்காய் கொடிகளில் நோய்தாக்கி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-08-20 18:45 GMT

பாகற்காய் கொடியை நோய்த்தாக்கி வெளிரிய மஞ்சள் நிறத்தில் காணப்படுவதை படத்தில் காணலாம். 

கூடலூர்: மசினகுடி பகுதியில் பாகற்காய் கொடிகளில் நோய்தாக்கி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பாகற்காய் விளைச்சல் பாதிப்பு

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் பருவமழை காலத்தில் வளரக்கூடிய பயிர்களை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். பின்னர் கோடை காலத்துக்கு ஏற்ற பயிர்களை பயிரிடுகின்றனர். மொத்தத்தில் கால நிலைகளுக்கு ஏற்ப விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை பருவ மழை பெய்யும் என்பதால் நெல், இஞ்சி உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர். இதில் கூடலூர் அருகே உள்ள மசினகுடியில் பாகற்காய் விவசாயத்தை பெரும்பாலான விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால் பாகற்காய் கொடிகளை ஒரு வகை நோய்த்தாக்கி வருகிறது. இதனால் பாகற்காய் கொடிகள் மஞ்சள் நிறத்தில் மாறி வளர்ச்சி இன்றி காணப்படுகிறது. இதன் காரணமாக விளைச்சல் அடியோடு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் கவலை

மேலும் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கூடலூர் பகுதியில் மழைக்காலம் என்பதால் மசினகுடி பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் பாகற்காய் விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் எதிர்பாராத வகையில் பாகற்காய்கொடிகளை ஒருவகை நோய்த்தாக்கி வருகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கூடலூர் பகுதியில் இஞ்சி, மரவள்ளி கிழங்கு, வாழை விவசாயத்திற்கு மட்டுமே காப்பீடு திட்டம் உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் பாகற்காய் விவசாயத்தையும் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்