நெல் பயிரில் செந்தாழை நோய் தாக்கம்
இளையான்குடி பகுதியில் நெல் பயிரில் செந்தாழை நோய் தாக்கியுள்ளதால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இளையான்குடி,
இளையான்குடி பகுதியில் நெல் பயிரில் செந்தாழை நோய் தாக்கியுள்ளதால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செந்தாழை நோய்
இளையான்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் நெல் பயிரிட்டுள்ளனர். ஆனால் போதிய மழை இல்லாததாலும், நெல் பயிரிடப்பட்ட விளை நிலங்களில் செந்தாழை நோய் தாக்கி வருவதாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல் பயிர்களை மீட்டெடுக்க முடியாமல் பரிதவிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் வைகை விவசாய கண்மாய்களில் தண்ணீர் வரத்தால் முழுவதும் நீர் நிரம்பி உள்ளது. ஒரு பகுதியில் மழை இன்றி பயிர்கள் கருகி அழிந்து விட்டன. மற்ற பகுதிகளில் தண்ணீர் இருந்தும் செந்தாழை நோய் தாக்கத்தால் நெல் பயிர்கள் முற்றிலும் அழிந்து விட்டன.
விவசாயிகள் கோரிக்கை
விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்தும் பலன் இன்றி பயிர்களை காக்க முடியவில்லை. எனவே வேளாண் துறை அதிகாரிகள் இளையான்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நெல் விவசாய நிலங்களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமாரிடம் விவசாயி ஒருவர், தான் பயிரிட்ட 15 ஏக்கர் நிலத்திலும் நெல் பயிர்கள் செந்தாழை நோய் தாக்கத்தால் அழிந்துவிட்டன. இதேபோல அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, விவசாயிகளின் நிலையை விவரித்து இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.