கரும்பு பயிரில் நோய் தாக்குதல்
கரும்பு பயிரில் நோய் தாக்குதல் ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்காக, மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். சுமார் 3 லட்சத்து 76 ஆயிரம் டன் கரும்பு அரைக்க ஆலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு மாவட்டத்தில் பரவலாக "பொக்கோபோய்ங்" என்ற பூஞ்சாண் நோய் தாக்கி கரும்புகளை வளர விடாமல் அழித்து வருகிறது.
ஆலைக்கு பதிவான கரும்புகளில் சுமார் 20 சதவீதம் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு நிர்வாகம் திட்டமிட்ட அளவு கரும்பு உற்பத்தி இருக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. கரும்பை தாக்கும் இவ்வகைப்பூச்சியின் உடலை சுற்றி வெள்ளை நிற கம்பளி போன்ற போர்வை அமைப்பு காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் கூறுகையில், 10 முதல் 12 மாத பயிரான சர்க்கரை கரும்பு வளர்ச்சி பரவலான நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏக்கருக்கு 50 டன் கரும்புகள் உற்பத்தியாகும் இடத்தில் 30 டன் கரும்புகளையே பெற முடியும். நோய் தாக்குதலை தடுக்க வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி கூறுகையில், பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் டிசம்பர் முதல் வாரத்திலேயே கரும்பு அரவைக்கு திட்டமிட வேண்டும். நோய் பரவாமல் தடுக்க முன்கூட்டியே கரும்புகளை வெட்டி முடித்து ஒருங்கிணைந்த நோய் எதிர்ப்பு மருந்து தெளிக்கும் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும், என்றார்.