தொழில் நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

தொழில் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-07-28 18:22 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து தொழில் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் கூறியதாவது:- இத்திட்டமானது 31 மாவட்டங்களில் (சென்னை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கன்னியாகுமரி மற்றும் திருப்பத்தூர் நீங்கலாக) 120 ஒன்றியங்களில் 3,994 கிராம ஊராட்சிகளில் 6 வருடங்களில் 2017 முதல் 2023-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும். கரூர் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது குளித்தலை வட்டாரத்தில் உள்ள 13 கிராம ஊராட்சிகளிலும், கரூர் வட்டாரத்தில் 14 கிராம ஊராட்சிகளையும் சேர்த்து 27 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் ஊரகத் தொழில் முனைவுகளை உருவாக்குதல், நிதிசேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்கள்ஆகும். இத்திட்ட நிதியானது உலக வங்கிக்கும், தமிழக அரசிற்கும் இடையே 70:30 என்ற நிதி விகிதத்தில் அமைந்துள்ளது.

இத்திட்டத்தினால் கிராமபுறத்தில் உள்ள பெண்கள் அவர்களின் குடியிருப்பு பகுதிகள் அருகிலேயே சிறு தொழில் கூடங்கள் அமைத்து செயல்படுத்தினால் போக்குவரத்து செலவினங்கள் குறைக்கப்படுவது மட்டுமல்லாமல் அவர்களது குடும்ப வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் மேம்படுத்துவதற்கு உறுதுனையாக இருக்கும். ஆகையால், தொழில் நிறுவனங்கள் சிறு தொழில் கூடங்கள் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்