நகர காங்கிரஸ் தலைவர் யார் என்பது குறித்து பேச்சுவார்த்தை
ஆரணி போலீஸ் நிலையத்தில் நகர காங்கிரஸ் தலைவர் யார் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.
ஆரணி
ஆரணி நகர காங்கிரஸ் தலைவராக ஜெ.பொன்னையனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஒப்புதலுடன் மாவட்ட தலைவர் தவணி வி.பி.அண்ணாமலை அறிவித்தார். இதையடுத்து அவர் கட்சியில் நடைபெற்று வரும் அனைத்து போராட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் முன்னாள் ஆரணி நகர தலைவராக இருந்த நகரசபை உறுப்பினர் டி.ஜெயவேல் தன்னை மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் 2 நாட்களில் நகர தலைவராக அறிவிப்பதாக கூறி திடீரென சில நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு இன்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாக சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகர தலைவர் ஜெ.பொன்னையன் அவரது ஆதரவாளருடன் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடு்தது துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், ஆகியோர் இருதரப்பு காங்கிரஸ் நிர்வாகிகளையும் அழைத்து சமரசம் செய்தனர்.
அப்போது உங்களுடைய பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் தலைமையிடம் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். அறிவிப்பு வந்தவுடன் நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு ஊர்வலமாக செல்லுங்கள். காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.
நிர்வாகியாக செல்ல வேண்டாம் எனக் கூறி சமரசம் செய்தனர்.
இதனையொட்டி ஜெயவேல் தவிர மற்ற நிர்வாகிகள், ஆதரவாளர்கள் காமராஜர் சிலைக்கு சென்று மாலை அணிவித்தனர்.