மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-11-16 19:00 GMT

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உரமிடும் முறை

தகுந்த வடிகால் வசதி ஏற்படுத்தி வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வடித்து வேர் பகுதிக்கு காற்றோட்ட வசதி ஏற்படுத்த வேண்டும். வெள்ள நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் ஊட்டச்சத்து பற்றாக் குறையால் பாதிக்கப்படும். இதனை நிவர்த்தி செய்ய பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு தழைச்சத்து கிடைக்கச்செய்ய வேண்டும்.

இதற்காக ஏக்கருக்கு 50 கிலோ அமோனியம் சல்பேட் அல்லது 42 கிலோ அமோனியம் குளோரைடு என்ற அளவில் இடலாம். அல்லது ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் தெளிக்கும் போது அதனுடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து இட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாக்க அறிவியல் நிலைய உழவியல் துறை உதவிப் பேராசிரியர் கருணாகரன், பூச்சியியல் துறை இணை பேராசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அளித்துள்ள பரிந்துரைகள் வருமாறு:-

தூர்கட்டும் நிலையில் உள்ள நெற்பயிருக்கு இலை வழி மூலம் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியா, 1 கிலோ ஜிங்க் சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். சூல் கட்டும் பருவத்தில் உள்ள நெற்பயிருக்கு 4 கிலோ டி.ஏ.பி. உடன் 10 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் தெளிந்த நீரை எடுத்து அதனுடன் 190 லிட்டர் தண்ணீர் கலந்து அதனுடன் 2 கிலோ பொட்டாஷ் கலந்து தெளித்து நெற்பயிரை பாதுகாக்கலாம்.

இலைக்கருகல் நோய்

பாக்டீரியா இலைக் கருகல் நோயை கட்டுப்படுத்த 20 சதவீதம் பசும்சாண கரைசல் தெளிக்க வேண்டும். தோட்டக்கால் பயிர்களுக்கு மழை நீர் தேங்குவதை தவிர்க்கும் பொருட்டு வடிகால் வசதியை ஏற்படுத்தி, மேலுரம் இட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்