நெல்லையப்பர் கோவிலில் திருஞானசம்பந்தரின் தேவார பாடல் ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு
நெல்லையப்பர் கோவிலில் திருஞானசம்பந்தரின் தேவார பாடல் ஓலைச்சுவடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் இருக்கும் அரிய ஓலைச்சுவடிகளை கண்டறிந்து அதனை பாதுகாப்பதற்காக, சிறப்பு திட்டத்தை அறிவித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் சு.தாமரை பாண்டியன் செயல்பட்டு வருகிறார். அவர், கடந்த 11 மாதங்களில் 232 கோவில்களில் ஆய்வு மேற்கொண்டு பல அரிய ஓலைச்சுவடிகளை கண்டறிந்துள்ளார். நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பேராசிரியர் தாமரைபாண்டியன் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இதுகுறித்து பேராசிரியர் தாமரைபாண்டியன் கூறியதாவது;-
நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் எனது தலைமையில் சுவடியியலாளர்கள் சண்முகம், சந்தியா, நீலகண்டன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் கள ஆய்வு நடத்தினோம். இங்கு கோவில் நிர்வாகம் பாதுகாத்து வந்த 10 செப்பு பட்டயங்களை கண்டறிந்தோம். பின்னர் கிரந்த எழுத்து வடிவில் அமைந்த வேணுவநாத தல புராணம், சைவ அக்னிகாரியம் உள்ளிட்ட 12 ஓலைச்சுவடி கட்டுகளை கண்டறிந்தோம்.
கோவிலில் பழைய பொருட்கள் போட்டு வைத்திருந்த அறையில் 2 அரிய தாள்சுவடிகளும், அதன் அருகில் உள்ள அறையில் பழைய பீரோவில் இருந்து ஒரு பழமையான ஓலைச்சுவடியும் கண்டுபிடிக்கப்பட்டது. பீரோவில் இருந்து கிடைத்த ஓலைச்சுவடியை ஆய்வு செய்தபோது, அதில் திருஞானசம்பந்தர் அருளி செய்த முதல் 3 திருமுறைகள் அடங்கிய தேவார பாடல்கள் இருந்தன. சுவடியின் தொடக்க பக்கத்தில் 'தோடுடைய செவியன்...' எனும் பாடல் எழுதப்பட்டு இருந்தது.
அந்த சுவடியில், அதனை பிரதி செய்தவர், பிரதி செய்யப்பட்ட காலம் போன்ற குறிப்புகள் இல்லை. எழுத்தமைதி மூலம் சுவடி பிரதி செய்யப்பட்ட காலம் சுமார் 200 ஆண்டுகள் இருக்கலாம் என அறிய முடிகிறது. சுவடியில் மொத்தம் 281 ஏடுகள் உள்ளன. அதில், இறுதியில் திருஞானசம்பந்தரான ஆளுடைய பண்டாரத்தின் 3-ம் திருமுறை முற்றும் ஆக 'திருக்கடைக்காப்பு 383 பூமிநாத சுவாமி பாதாரவிந்ததே கெதி நமச்சிவாய' என்று குறிப்பு உள்ளது. சுவடி நல்ல நிலையில் உள்ளது. சுவடியை முழுமையாக ஆய்வு செய்தால், திருஞானசம்பந்தரின் பாடல்களை ஒப்பு நோக்கி பாட பேதம் நீக்கி செம்பதிப்பு நூல் கொண்டுவர உதவும். இவ்வாறு அவர் கூறினார்.