திருப்பாச்சேத்தியில் வாமன சின்னத்துடன் கூடிய நில தானக்கல் கண்டெடுப்பு தொல்நடைக்குழு காளிராஜா தகவல்

திருப்பாச்சேத்தியில் வாமன சின்னத்துடன் கூடிய நில தானக்கல் கண்டெடுக்கப்பட்டது என தொல்நடைக்குழு புலவர் காளிராஜா கூறினார்.

Update: 2023-06-22 18:45 GMT

திருப்புவனம்

திருப்பாச்சேத்தியில் வாமன சின்னத்துடன் கூடிய நில தானக்கல் கண்டெடுக்கப்பட்டது என தொல்நடைக்குழு புலவர் காளிராஜா கூறினார்.

நிலதானக்கல்

திருப்பாச்சேத்தியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அய்யப்பன், சோனைமுத்து ஆகியோர் அளித்த தகவலின் அடிப்படையில், வாமன சின்னத்துடன் கூடிய நில தானக்கல்லை சிவகங்கை தொல்நடை குழு நிறுவனர் புலவர் காளிராஜா கண்டெடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

மாவலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்க 3 அடி உயரத்தில் திருமால் வாமன அவதாரம் எடுத்தார். அந்த அவதாரத்தில் கையில் குடை, கெண்டி எனும் நீர் சொம்பு வைத்திருந்தார். அதன் அடிப்படையில் நில தானம் தொடர்பான கல்வெட்டுகளில் வாமன அவதாரத்தையும், குடை, கெண்டி போன்றவற்றையும் பொறிப்பது பழங்காலத்தில் வழக்கமாக இருந்துள்ளது. திருப்பாச்சேத்தி பகுதியில் பாண்டியர் மன்னர் காலத்தில் அதிக அளவில் நிலக்கொடை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது கண்டறியப்பட்ட வாமன சின்னம் பொறித்த நில தானக்கல், திருப்பாச்சேத்தி- சம்பராயனேந்தல் இடையே கண்டெடுக்கப்பட்டது. இதில் வாமன சின்னமும், குடை, கெண்டி மற்றும் செண்டு பொறிக்கப்பட்டிருந்தது.

எல்லைப்பிடாரி

செண்டு என்பது அதிகாரம் உள்ளவர் கையில் அதாவது மன்னர்களின் கையில் இருக்கும். இதன் மூலம் அப்பகுதியில் ஆட்சி செய்த மன்னர்கள் நிலக்கொடை அளித்திருப்பதை அறிய முடிகிறது. இக்கல்லை தற்போது திருப்பாச்சேத்தி மக்கள் எல்லைப்பிடாரி தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். கள ஆய்வின்போது ஆசிரியர் ராஜா உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்