சங்க கால பெண்கள் பயன்படுத்திய சுடுமண் காதணிகள் கண்டெடுப்பு

புதுப்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் சங்ககால பெண்கள் பயன்படுத்திய சுடுமண் காதணிகள் கண்டெடுக்கப்பட்டது

Update: 2023-01-12 18:45 GMT

புதுப்பேட்டை

கள ஆய்வு

பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள உளுந்தாம்பட்டு மற்றும் எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சங்ககால பெண்கள் அணிந்த சுடுமண்ணாலான காதணியை கண்டெடுத்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

சுடுமண் காதணிகள்

ஏற்கனவே பண்ருட்டி பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையில் மேற்புர கள ஆய்வின் போது சுடுமண் பொம்மை, வட்டசில்லு, சுடுமண் புகைபிடிப்பான், சுடுமண் அகல்விளக்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஆற்று படுகையில் மேலும் ஆய்வு மேற்கொண்ட போது சங்ககால பெண்கள் அணிந்த சுடுமண்ணாலான காதணிகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த காதணிகள் வட்ட வடிவம் மற்றும் தோடு போன்ற வடிவத்தை கொண்டதாக உள்ளது.

தோடு போன்ற அமைப்பினை கொண்ட காதணியின் மேற்புறத்தில் அழகாக கோட்டுருவம் போன்று வரையப்பட்டுள்ளது. இந்த கோட்டுருவம் அக்கால மக்களின் கலை நுணுக்கங்களை காட்டுவதாக உள்ளது. சுடுமண் பொருட்கள் காலத்தால் அழியாதது, எளிதில் சேதமடையாது என்பதால் பண்டைய காலத்தில் சுடுமண் காதணிகள் புழக்கத்தில் இருந்திருக்கிறது. இதுபோன்ற சுடுமண்ணாலான காதணிகள் மதுரை கீழடியில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்