சோழர் கால சப்த மாதர் சிற்பங்கள் கண்டெடுப்பு

மயிலத்தில் சோழர் கால சப்த மாதர் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.

Update: 2023-02-24 18:45 GMT

மயிலம்:

மயிலத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ள இக்கிராமத்தில் சோழர் காலத்தை சேர்ந்த சப்த மாதர் சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது:-

மயிலத்தில் பழமைவாய்ந்த மயிலியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் இம்மாதம் 3-ந் தேதி நடந்தது. அப்போது மூலவர் சிலைக்குப்பின்புறம் பலகைக்கல்லில் வடிக்கப்பட்ட சப்த மாதர் சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது அந்த சிற்பங்கள் வெளியே எடுக்கப்பட்டு தனியே வைத்து வழிபடப்பட்டு வருகின்றன.

சோழர் காலத்தை சேர்ந்தவை

இந்த சிற்பங்களை ஆய்வு செய்ததில், 4 சிற்பங்கள் 11-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகவும் மற்ற 3 சிற்பங்கள் 18 அல்லது 19-ம் நூற்றாண்டினை சேர்ந்தவையாகவும் இருப்பது தெரியவந்தது. இவற்றை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால் உறுதிப்படுத்தி இருக்கிறார். சோழர் காலத்தில் இப்பகுதியில் சப்த மாதர்களுக்கான தனி சிற்றாலயம் இருந்து பின்னர் மறைந்திருக்க வேண்டும். ஒட்டுமொத்த சிற்பத்தொகுதியில் சில சிற்பங்கள் காலப்போக்கில் சேதம் அடைந்திருக்கலாம். இதனால் 3 சிற்பங்கள் மட்டும் 200 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக செய்து வைக்கப்பட்டுள்ளன.

சப்த மாதர் வழிபாடு, தமிழ்நாட்டில் மிகவும் பழமைவாய்ந்ததாகும். இந்த சிற்பங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிடைத்துள்ளன. விழுப்புரம் அருகே உள்ள பிடாரிப்பட்டு கிராமத்தில் முதலாம் ராஜராஜன் காலத்தை சேர்ந்த (கி.பி.1012) சப்த மாதர் சிற்பங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மயிலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சப்த மாதர் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இதன் மூலம் மயிலத்தின் பழமையும், தொன்மையும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்