பழமையான சிற்பங்கள் கண்டுபிடிப்பு

மானாமதுரை அருகே பழமையான சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2022-08-27 18:04 GMT

மானாமதுரை, 

மானாமதுரை அருகே பழமையான சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

சிற்பங்கள்

மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் பழமையான சிற்பம் இருப்பதாக க.புதுக்குளத்தை சேர்ந்த சிவக்குமார் கொடுத்த தகவலின்படி, பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆய்வாளர்கள் மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இது குறித்து இவர்கள் கூறியதாவது, கட்டிக்குளம் அய்யனார் கோவில் வாசலில் உள்ள இந்த சிற்பம் முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்ததாகும். இங்கு ஒரு பழமையான சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும். கால ஓட்டத்தில் அழிந்திருக்கலாம். மீதம் இருப்பது இந்த இரண்டு சிற்பங்கள் மட்டுமே.

9-ம் நூற்றாண்டு

பெண் சிற்பம் வைஷ்ணவி அல்லது நாராயணி என்று அழைக்கப்படும் பெண் தெய்வமாகும். இந்த சிற்பத்தின் உயரம் 2 ½ அடியும், அகலம் 1½ அடியும் உள்ளது. அன்னையின் கிரீடம் மிகுந்த வேலைப்பாடுடன் அழகாக காட்சி தருகிறது. வலது கையில் சக்கரம் பிரயோக கோலத்திலும், இடது கையில் சங்கும் காணப்படுகிறது. கழுத்தில் அழகான ஆபரணங்கள் காணப்படுகிறது. வலது முன் கை அபய ஹஸ்தத்திலும், இடது முன் கை தொடை மீது வைத்த நிலையில் காணப்படுகிறது. இதற்கு ஊறு ஹஸ்தம் என்று பெயர். சுகாசன கோலத்தில் அழகாக அமர்ந்திருக்கிறார்.

விநாயகர் சிற்பத்தின் உயரம் 3 அடி, அகலம் 2 அடி ஆகும். மிகவும் பழமையான சிற்பமாக இருப்பதால் சற்றே தேய்மானம் அடைந்திருப்பதால் கைகளில் வைத்திருக்கும் ஆயுதங்கள் தெளிவாக தெரியவில்லை. இந்த இரண்டு சிற்பங்களும் பலகைக்கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இது போன்று புடைப்பு சிற்பம் உருவாக்கும் மரபு முற்கால பாண்டியர் காலத்தில் மிகவும் அதிக அளவில் காணப்பட்டது. இந்த இரண்டு சிற்பங்களும் சப்த மாதர்கள் தொகுப்பில் இருந்திருக்கலாம். இவற்றின் காலம் கி.பி. 9-ம் நூற்றாண்டு ஆகும். இதுபோன்ற கலை பொக்கிஷங்களை காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்