பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு
ராஜபாளையம் அருகே பழமையான சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே பழமையான சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.
நடுகல் சிற்பங்கள்
ராஜபாளையம் மடத்துப்பட்டி அருகே அமைந்துள்ள கொண்டனேரி கண்மாயில் கல் சிற்பங்கள் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் வினித் தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான கந்தசாமி களப்பணியில் ஈடுபட்டார்.
அப்போது அங்குள்ள கண்மாயில் 2 நடுகல் சிற்பங்களும், ஒரு சதிக்கல்லும் கல் மேடையமைத்து வரிசையாக நிறுத்தி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
கல் சிற்பங்கள் அனைத்தும் கி.பி. 17-ம் நூற்றாண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது. வீர மரணம் அடைந்த 2 வீரர்களுக்கு தனித்தனியே எடுக்கப்பட்ட நடுகல் மற்றும் வீரன் இறந்தவுடன், மனைவியும் சேர்ந்து தீயில் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ்வுக்காக எடுக்கப்பட்ட சதிக்கல்லும் காணப்படுகிறது.
மாடக்கோவில்
முதல் நடுகல் சிற்பம் கூம்பு வடிவில் மாடக்கோவில் போன்று வடிவமைத்து மழை, வெயில் தாக்காதவாறு அமைந்துள்ளது. 2-வது நடுகல் சிற்பத்தின் மேல் பகுதி இரண்டடுக்கு மாட கோபுர அமைப்பு போன்று வடிவமைக்கப்பட்டு கீழே வீரன் ஒருவன் நின்ற நிலையில் மேல்பகுதியை தனது வலது கை கொண்டும், கீழ்ப்பகுதியை இடது கை கொண்டும் பிடித்து தரையில் ஊன்றியபடி சிற்பம் அமைந்துள்ளது. 3-வது உள்ள சதிக்கல் சிற்பத்தில் வீரனும், அவனது மனைவியும் அமர்ந்த நிலையில் அமைந்துள்ளது.
வரலாற்று சிறப்பு
இந்த 3 சிற்பங்களையும் கருப்புசாமி, கருப்பாயி, சுடலைமாடன் என்ற பெயரில் மக்கள் வழிபட்டு வருகின்றனர். கண்மாயில் நீர் நிரம்பி இருக்கும் பொழுது சிற்பங்கள் நீருக்குள் மூழ்கி இருந்துள்ளது.
இங்கு காணப்படும் வீரக்கல் மற்றும் சதிக்கல் சிற்பங்களைக் கொண்டு பல ஆண்டுகளுக்கு முன் வீரத்தை வெளிப்படுத்தும் வீர நிகழ்வுகள் இப்பகுதியில் நடந்துள்ளதை அறிய முடிகிறது. ராஜபாளையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழமையான நடுகற்கள், சதிச்சிற்பம் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.