பழமையான வெண்கல எழுத்தாணிகள் கண்டுபிடிப்பு

நெல்லை, கன்னியாகுமரி பகுதியில் பழமையான வெண்கல எழுத்தாணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Update: 2023-05-23 18:45 GMT

நெல்லை, கன்னியாகுமரி பகுதியில் பழமையான வெண்கல எழுத்தாணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது:-

எழுத்தாணி

தமிழர்கள் தங்களின் தொன்மையான அறிவு மரபுகளைப் பல்வேறு எழுதப்படும் பொருட்களில் எழுதி வைத்துப் பாதுகாத்து வந்துள்ளனர். தமிழர்கள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், யானைத் தந்தம், செம்பு, வெள்ளி, தங்கம், கல் முதலியவற்றில் தங்கள் பண்பாட்டையும், வரலாற்றையும் எழுதி வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். இதில் ஓலையில் எழுதி வைக்கும் வழக்கம் மிகுதியாக இருந்துள்ளது. ஓலையில் எழுத எழுதுபொருளாக எழுத்தாணியை தமிழர் மிக நீண்ட காலம் பயன்படுத்தி வந்து உள்ளனர்.

தமிழர்கள் ஓலையில் எழுத இரும்பு, வெள்ளி, தங்கம் முதலியவற்றால் ஆன எழுத்தாணிகளைப் பயன்படுத்தி உள்ளனர். ஓலையில் எழுதும் மரபு சங்க காலத்திலேயே இருந்துள்ளது. எழுத்தாணி அதன் பயன்பாட்டு அடிப்படையில் மூன்று வித அமைப்பாக உள்ளன.

அதன்படி அதிக நீளம் இல்லாமல் எழுத்தாணியின் கொண்டைப் பகுதி கனமாகவும் குண்டாகவும் அமைந்து காணப்படும் எழுத்தாணி குண்டெழுத்தாணி எனப்படும். குண்டெழுந்தாணியின் முனை பகுதியின் கூர்மை குறைவாகக் காணப்படும். குழந்தைகள் எண்ணும் எழுத்தும் எழுதிப் பழக குண்டெழுத்தாணியைப் பயன்படுத்துவார்கள். எழுத்துகள் பெரிதாக இருக்கும்.

கூரெழுத்தாணி

அதேபோன்று கூரெழுத்தாணியின் முனைப்பகுதி கூர்மையாக இருக்கும். இந்த எழுத்தாணியினை நன்கு கற்றுத் தேர்ந்த கல்வியாளர்கள் பயன்படுத்துவர். எழுத்துகள் சிறியதாக இருக்கும். ஓலையின் ஒரு பத்தியில் 18 வரிகள் வரை எழுதுவதற்குரியதாக அமைந்திருக்கும்.

மேலும் சற்று நீளமாக வாரெழுத்தாணி இருக்கும். எழுத்தாணியின் மேற்பகுதியியில் கொண்டைக்குப் பதிலாகச் சிறிய கத்தி அமைந்திருக்கும். கீழ்ப் பகுதியில் கூர்மையானதாக எழுதும் பகுதி அமைந்து காணப்படும். எழுத்தாணியின் ஒரு பகுதியில் உள்ள கத்தி ஓலையை வாருவதற்குப் பயன்படும். அதனால் இவ்வெழுத்தாணி வாரெழுத்தாணி என்று அழைப்படுகிறது. ஒரு முனையில் கத்தியும் மறுமுனையில் எழுதவும் பயன்படும் வாரெழுத்தாணியின் இரு முனைகளையும் மடக்கி ஒரு மரத்தாலான கைப்பிடிக்குள் அடக்கி வைத்துக் கொள்ளும் தன்மையிலான எழுத்தாணி மடக்கெழுத்தாணி எனப்படுகிறது. எழுத்தாணி மடக்கி வைக்கப்படுவதால் எழுத்தாணியின் கூர்மையான பகுதி மற்றும் கத்தியினால் ஏற்படும் எதிர்பாராத இன்னலைத் தடுக்க உதவுகிறது. தமிழர்கள் வெட்டெழுத்தாணி எனும் எழுத்தாணியினைப் பயன்படுத்தியதாகவும் அறிய முடிகிறது.

கண்டுபிடிப்பு

தமிழர்களின் இத்தகைய அறிவு தொழில்நுட்பக் கருவியான எழுத்தாணிகளை திரட்டிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதன்படி நெல்லை மற்றும் குமரி மாவட்டப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட போது, நெல்லை மாவட்டம் சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ராமலிங்கம், கணேசன் ஆகியோரிடம் இருந்த பழமையான கூரெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை வெண்கலம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்டவை ஆகும். இதனை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்