பழனி தேவஸ்தான அலுவலர் குடியிருப்பில் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
பழனி தேவஸ்தான அலுவலர் குடியிருப்பில் வரி பாக்கி எதிரொலியாக குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
பழனி நகராட்சி நிர்வாகம் சார்பில் வீடுகள், வணிக நிறுவனங்களிடம் இருந்து சொத்து மற்றும் குடிநீர் வரி வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில் வரிபாக்கி வைத்திருப்போர் உடனடியாக செலுத்தக்கோரி நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் சிலர் வரி செலுத்தவில்லை.
இதனையடுத்து வரி செலுத்தாத வீடுகள், வணிக நிறுவனங்களின் குடிநீர் இணைப்பை நகராட்சி ஊழியர்கள் துண்டித்து வருகின்றனர். அதன்படி ரூ.1.83 லட்சம் வரி பாக்கி வைத்திருந்த பழனியாண்டவர் கலை கல்லூரி மற்றும் ரூ.17 லட்சம் வரி பாக்கி வைத்துள்ள பழனி கோவில் தேவஸ்தான அலுவலர்கள் குடியிருப்பின் 15 இணைப்புகளை நகராட்சி ஊழியர்கள் நேற்று துண்டித்தனர். இதேபோல் வரி பாக்கி வைத்திருப்போரின் குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.