டாஸ்மாக் கடை விற்பனையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை

மதுபாட்டிலை கூடுதல் விலைக்கு விற்றதாக புகாரில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2022-05-30 20:22 GMT

மதுரை, 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரிங்லின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வருகிறேன். இந்தநிலையில் என் மீதான புகார் குறித்து எந்த விசாரணையும் நடத்தாமல், திடீரென என்னை வேறொரு கடைக்கு இடமாற்றம் செய்து கடந்த 18-ந்தேதி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார். இது சட்டவிரோதம். அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். என்னை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது டாஸ்மாக் தரப்பு வக்கீல் ஜமீல்அரசு, ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி, டாஸ்மாக் கடையில் விற்பனையாளரான மனுதாரர், மதுபாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார். இது டாஸ்மாக் பறக்கும்படை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில் அவர் வேறொரு கடைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார். இதேபோல ஏற்கனவே மனுதாரர் மீது புகார் வந்தது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் விதிமீறலில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்திருக்கலாம்.

ஆனால் தண்டனை நடவடிக்கையாக அவரை இடமாற்றம் செய்ய முடியாது. ஏனென்றால் இடமாற்றம் என்பது ஒழுங்கு நடவடிக்கைக்கான தீர்வாக அமையாது ஏற்கனவே ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. அந்த வகையில் மனுதாரரை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர் மீதான புகாரை விசாரிப்பதற்காக அவரை பணியிடை நீக்கம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்வதற்காக இந்த வழக்கு உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்