மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம்

வேலூர் மாவட்ட உள்ளூர் விடுமுறை காரணமாக குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனை அறியாமல் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Update: 2023-05-15 18:06 GMT

உள்ளூர் விடுமுறை

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்கள் அளிக்கும் உதவித்தொகை, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பெற்று கொள்வார்கள். பின்னர் அந்தந்த துறை அதிகாரிகளிடம் மனுக்கள் வழங்கப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்படும்.

இந்த நிலையில் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு விழாவையொட்டி நேற்று வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக திங்கட்கிழமை தோறும் நடக்கும் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதனை அறியாமல் பொதுமக்கள் பலர் காலை 10 மணி முதல் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

பொதுமக்கள் ஏமாற்றம்

அங்கு குறைதீர்வு கூட்டம் நடைபெறாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். கூட்டம் நடைபெறாததால் பொதுமக்கள் தங்களின் மனுக்களை போடுவதற்காக கலெக்டர் அலுவலக போர்டிகோவில் வைக்கப்பட்டிருந்த புகார் அளிக்கும் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் பொதுமக்கள் தங்கள் மனுக்களை போட்டு சென்றனர்.

பொதுமக்கள் பலர் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் காயிதே மில்லத் அரங்கம் அருகே அமர்ந்திருந்தனர். அவர்களிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் உதவி கலெக்டர் தனஞ்செயன் ஆகியோர் மனுக்கள் பெற்று கொண்டனர்.

சிலர் குறைதீர்வு கூட்டம் நடைபெறாததால் தங்களின் மனுக்களை அளிக்காமல் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்