மாற்றுத்திறனாளி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-26 18:31 GMT

அரியலூர் மாவட்டத்தில் 2022-23-ம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ-மாணவிகளுக்கான வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கிட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ஒரு ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.ஆயிரமும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரமும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.4 ஆயிரமும், தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.4 ஆயிரமும், இளங்கலை பட்ட படிப்பிற்கு ரூ.6 ஆயிரமும், முதுகலை பட்ட படிப்பு மற்றும் தொழில் படிப்பிற்கு ரூ.7 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும் பார்வையற்ற மாணவ-மாணவிகளுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு, தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.3 ஆயிரமும் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு மாணவ-மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரமும் முதுகலை பட்டபடிப்பு மாணவ-மாணவிகளுக்கு ரூ.6 ஆயிரமும் வாசிப்பாளர் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ-மாணவிகள் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றுள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்த பட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் பிறத்துறைகளில் கல்வி உதவித்தொகை பெற வில்லை என தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் சான்றிதழ், மாணவ, மாணவிகளின் வங்கி கணக்கு புத்தக நகல், முகம் மட்டும் தெரியும்படியான தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் உரிய விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 17-ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்