இரட்டைக் கொலையில் மாற்றுத்திறனாளி கைது
விளாத்திகுளம் அருகே இரட்டைக் கொலையில் மாற்றுத்திறனாளியை போலீசார் கைது செய்தனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே இரட்டைக் கொலையில் மாற்றுத்திறனாளி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இரட்டைக் கொலை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூதலபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சையா மனைவி ராஜாமணி (வயது 68). இவர் தனது மகனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டிற்கு வந்த மர்ம நபர் ராஜாமணியை வெட்டிக் கொலை செய்தார்.
இதேபோல் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தனியாக இருந்த பொன்னுச்சாமி என்பவரையும் மர்ம நபர் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த காடல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை பிடிக்க 7 தனிப்படையும் அமைக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளி கைது
இதையடுத்து போலீசார், அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மாற்றுத்திறனாளி ஒருவர் அரிவாளுடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் குறித்து ேபாலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா (53) மாற்றுத்திறனாளி என்பது ெதரியவந்தது. பின்னர் சுப்பையாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பரபரப்பு தகவல்
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியானது.
சுப்பையாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் மது அருந்திவிட்டு அடிக்கடி ரகளையில் ஈடுபட்டு வந்தார். இரவில் ராஜாமணி வீட்டின் கதவை தட்டி தண்ணீர் கேட்பது, பீடி கேட்பதும் என தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார். இதுகுறித்து ராஜாமணி ஊர் பெரியவர்களிடம் கூறினார். அவர்கள், சுப்பையாவை கண்டித்தனர். இதனால் ராஜாமணி மீது சுப்பையாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜாமணி வீட்டின் அருகே உள்ள டீக்கடையில் சுப்பையா அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு ராஜாமணி, பொன்னுச்சாமி ஆகியோர் பேசிக் கொண்டு இருந்தனர். இதை பார்த்த சுப்பையா 2 பேரையும் முறைத்து பார்த்தார். இதனால் ராஜாமணி, சுப்பையாவை திட்டிவிட்டு சென்றார். இது சுப்பையாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
போலீசாரிடம் நக்கல்
நள்ளிரவில் மதுபோதையில் சுப்பையா அரிவாளுடன் ராஜாமணி வீட்டின் கதவை தட்டினார். அவர் கதவை திறந்த உடன் தலையில் வெட்டினார். பின்னர் ராஜாமணி அங்கு இருந்து ஓடி, அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்ற பஸ்சில் ஏறினார். தொடர்ந்து விரட்டிச் சென்ற சுப்பையா, ராஜாமணியை பஸ்சின் படிக்கட்டு வழியாக கீழே இறங்கி சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் பொன்னுச்சாமி வீட்டிற்கு சென்று அவரையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றுவிட்டார்.
மறுநாள் காலையில் ஒன்றும் தெரியாதது போல் ஊருக்கு வந்த சுப்பையா, போலீசாரிடமே சென்று என்ன சம்பவம் என்று நக்கலாக கேட்டுள்ளார்.
ஆன்மிகவாதி
இதையடுத்து போலீசார், சுப்பையாவை அதிரடியாக கைது செய்தனர். மேலும் சுப்பையா சமீபகாலமாக தான் ஆன்மிகவாதியாக மாற போவதாகவும் கிராம மக்களிடம் கூறிவந்துள்ளார்.
மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.