குறுகிய காலத்தில் மனுக்கள் மீது தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவு
குறுகிய காலத்தில் மனுக்கள் மீது தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி கூறுகையில், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படுகின்ற மனுக்கள் மீது அதிகபட்சம் 33 நாட்களுக்குள் தீர்வு காணப்படுகிறது. மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி குறுகிய காலத்தில் மனுக்களுக்கு தீர்வு காணும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சில மனுக்கள் மீதான விசாரணை காலம் தாமதம் ஆவதற்கு, சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் அரியலூர் மாவட்டத்தில் அமையாததும் ஒரு காரணம் ஆகும். குறிப்பாக நேரு யுகேந்திரா தொடர்பானவை உள்ளிட்ட மனுக்கள் மீது விசாரணை காலதாமதம் ஆகிறது. அதேபோன்று குடிசை மாற்று வாரியம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையும் காலதாமதம் ஆகிறது. நன்றாக வேலை பார்த்து குறுகிய காலத்தில் பல மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு கண்டாலும், காலதாமதம் செய்யும் அதிகாரிகளால் உரிய பலன் கிடைப்பது இல்லை. அந்த தாமதத்தை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.
இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா:- போலீசார் மூலம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகிறது. அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டுகளிடம் ஒப்படைக்கப்பட்டு, உடனடியாக தீர்வு காணும்படி அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படுகிறது. இது தொடர்பாக மனுக்கள் அளித்த பொதுமக்களிடமே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தீர்வு குறித்து தெரிவிக்கப்படுவதும், விசாரிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.