சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்களை இயக்குனர் ஆய்வு

நாமக்கல்லில் சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்கள் குறித்து மாநில இயக்குனர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-12-31 18:45 GMT

ஆய்வு கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை முன்னிலையில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குனர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், வரபெற்ற விண்ணப்பங்களின் எண்ணிக்கை, பயனடைந்தோர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து விரிவாக கேட்டறிந்தார். பின்னர் இக்கூட்டத்தில் சுரேஷ்குமார் பேசும்போது கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை திட்டம், கல்வி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை, பேகம் ஹஜ்ரத் மகால் தேசிய கல்வி உதவி தொகை திட்டம், மாணவிகளுக்கான கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் என்பது உள்பட பல்வேறு திட்டங்கள் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை தகுதியான நபர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தினசரி தெரிவிக்க வேண்டும்

பள்ளிமேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பாக கல்லூரி கல்வி இணை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு நிலுவை விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை தினந்தோறும் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட சிவஞானம் தெரு, சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் பயனடைந்த பயனாளிகளின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கண்காணிப்பாளர் (பொது) சேகர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்