குறுவை சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு தொழில்நுட்பம்
திருத்துறைப்பூண்டி பகுதிகளில் குறுவை சாகுபடியில் நேரடி நெல் விதைப்புதொழில்நுட்பம் குறித்து வேளாண் உதவி இயக்குனர் சாமுநாதன் தெரிவித்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பகுதிகளில் குறுவை சாகுபடியில் நேரடி நெல் விதைப்புதொழில்நுட்பம் குறித்து வேளாண் உதவி இயக்குனர் சாமுநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
குறுவை சாகுபடி
நடப்பு ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் கடந்த ஆண்டு சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு குறுவை சாகுபடி பரப்பு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைமூலமாக குறுவைத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாலும், குறுவை நெல்லினை அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து அதிக லாபம் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாலும் குறுவை சாகுபடி செய்ய விவசாயிகள் முனைப்புடன் பணிகளை செய்ய உள்ளனர்.
நெல் விதைப்பு
பள்ளக்கால் பகுதிகளில் டி.பி.எஸ்.5 ஏ.எஸ்.டி.16 ஏ.டி.டி.37, ஏ.டி.டி.36 ஏ.டி.டி.54 முதலிய குறுகிய கால ரகங்களை சாகுபடி செய்திடவும், மேட்டுக்கால் பகுதியில் கோ.ஆர்.51, கோ.ஆர்.53 முதலிய ரகங்களை சாகுபடி செய்திடவும் பரிந்துரை செய்யப்படுகிறது. வயலினை நன்கு புழுதி விட உழவு செய்து எந்திரம் மூலம் வரிசையாக குறுவை நெல் விதைப்பு செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும். விதைப்பு கருவி தேவைப்படுவோர் அந்தந்த பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
விதைப்பு செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் சூடோமோனஸ் எதிர் உயிரின் மூலம் விதை நேர்த்தி செய்து பிறகு விதைக்க வேண்டும். 50 கிலோ நெல்லிற்கு 500 கிராம் சூடோமோனஸ், 500 மில்லி லிட்டர் அசோஸ்பைரில்லம்,, 500 மில்லி லிட்டர் பர்ஸ்ட் பாக்டீரியா, 50 மில்லி லிட்டர் பொட்டாஸ் பாக்டீரியா ஆகியவற்றை வடித்து ஆற வைத்த அரிசி கஞ்சியுடன் கலந்து, இதை விதை நெல்லுடன் கலந்து 30 நிமிடம் நிழலில் உலர்த்தி பிறகு விதைக்க வேண்டும்.
விதைத்த பின் மழை பெய்தால் ஈரத்தில் விதை முளைத்து விடும் மழை இல்லை எனில் ஆற்றில் வரும் நீரினை பாய்ச்சி முளைக்க செய்ய வேண்டும். புழுதியில் நேரடி விதைப்பு செய்யும் விவசாயிகள் உடனடியாக பட்டம் பிரித்து விட வேண்டும். அப்போதுதான் பயிர் வளர்ந்து வரும் போது உரிய உரம், பூச்சி மருந்து தெளிக்கவும் பயிர் தொகை பராமரிக்கவும் வாய்ப்பாக இருக்கும். இவ்வாண்டு எலி சேதம் அதிகமாக இருப்பதால் இப்போதே விவசாயிகள் ஒன்றிணைந்து எலி ஒழிப்பு செய்ய வேண்டும் என அறிவுரை தெரிவிக்கப்பட்டுள்ளது.