நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2023-01-27 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:-

விழுப்புரம் பானாம்பட்டு- பில்லூர் இடையே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலேயே சாலைப்பணிகள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். கடந்த ஜூன் மாதம் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் பட்டா மாற்றம் கேட்டு கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு இன்னும் பட்டா மாற்றம் செய்து தரப்படவில்லை. அவற்றை விரைந்து வழங்க வேண்டும்.

அணைக்கட்டுகளை சீரமைக்க...

மாவட்டத்தில் சேதமடைந்த எல்லீஸ்சத்திரம், தளவானூர், சொர்ணாவூர் ஆகிய அணைக்கட்டுகளின் தற்போதைய நிலவரம் என்ன? எல்லீஸ்சத்திரம் தடுப்பணை உடைந்ததால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இதே நிலை நீடித்தால் வரும் ஆண்டில் கால்நடைகளுக்குக்கூட தண்ணீர் இல்லாமல் போய்விடும். குடிமராமத்து திட்டப்பணிகள் 38 ஏரிகளில் முழுமையாக முடிந்த நிலையில் அந்த ஏரிகளில் முள்செடிகள், சீமைக்கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளது. அவற்றை விரைந்து அகற்ற வேண்டும்.

கிராமப்புறங்களில் சேகரிக்கும் குப்பைகளை பயோ கம்போஸ் உரமாக மாற்றி கிராம விவசாயிகளுக்கு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். பட்டு வளர்ச்சித்துறை சரிவர செயல்படுவதில்லை. விக்கிரவாண்டி, செஞ்சி வட்டங்களில் வேளாண் உதவி இயக்குனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை விரைந்து நிரப்ப வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.

இதற்கு பதிலளித்து கலெக்டர் மோகன் பேசியதாவது:-

அலுவலர்கள் விடுப்பில் செல்லக்கூடாது

எல்லீஸ்சத்திரம், சொர்ணாவூர் புதிய அணைக்கட்டு அமைப்பதற்கான பணிகள் அரசாணை வரும் நிலையில் உள்ளன. தளவானூரில் ரூ.56 கோடியில் புதிய தடுப்பணை அமைப்பது குறித்து திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விவசாய சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து, குடிமராமத்து திட்டப்பணிகளில் மேற்கொள்ளப்பட்டவை எவை, எங்கெல்லாம் முள்செடிகள் அகற்றப்பட்டுள்ளன போன்ற விவரங்களை எடுத்துரைக்க வேண்டும். மாவட்டத்தில் கடந்த ஆண்டில் எந்தெந்த பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதோ, அங்கெல்லாம் இந்த ஆண்டிலும் திறக்கப்படும். முதல்கட்டமாக இம்மாத இறுதிக்குள் 35 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். இதுதவிர விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து கூடுதலாகவும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர்

(ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும். காலாவதியான பூச்சி மருந்து, உரம், கலப்பட உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை விற்பனை செய்பவர்கள் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதற்கு வேளாண் அதிகாரி ஒருவர் பதிலளித்து பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் காலாவதியான பூச்சி மருந்து, உரம், மற்றும் கலப்பட உரங்களை விற்பனை குறித்து இன்னும் 4 நாட்களுக்குள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய கலெக்டர் மோகன், அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் இப்பிரச்சினை குறித்து கடந்த கூட்டத்தின்போதே விவாதிக்கப்பட்ட நிலையில் தற்போதைய கூட்டத்திலும் இப்பிரச்சினை எழுகிறது. விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அதிகாரிகளின் செயல்பாடு இருக்க வேண்டும் என்றும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் கலெக்டர் மோகன் பேசுகையில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு துறைசார்ந்த அலுவலர்கள் அனைவரும் கண்டிப்பாக வர வேண்டும். யாரும் விடுப்பில் செல்லக்கூடாது. கடந்த கூட்டத்தில் விவசாயிகள் அளித்த கோரிக்கைகளுக்கு பதில், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு விவரங்களுடன் அலுவலர்கள் தயார் நிலையில் கூட்டத்துக்கு வர வேண்டும். நம்மை கேள்வி கேட்டு அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றால் நாம் வீக்காகி விட்டோம் என்று அர்த்தம். எனவே குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வரும் அதிகாரிகள் புள்ளி விவரங்களுடன் தயார் நிலையில் வர வேண்டும், அப்போதுதான் இக்கூட்டமும் ஆக்கப்பூர்வமான கூட்டமாக இருக்கும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்