தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-14 18:45 GMT

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரசு ஒதுக்கீட்டு இடம்

கடலூர் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மங்களூர் மற்றும் நெய்வேலியில் உள்ளன. இந்த அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023-ம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு 13-ந் தேதி (அதாவது நேற்று முன்தினம்) முதல் நேரடியாக சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே மாணவ- மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவு விவரங்களை www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். இதில் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நேரடியாக சேர்க்கை அளிக்கப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா சைக்கிள், புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு (மின்சாரப் பணியாளர் மற்றும் பொருத்துனர் பிரிவு) சுய வேலைவாய்ப்பு செய்திடும் பொருட்டு கைக்கருவிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது.

உதவித்தொகையுடன் பயிற்சி

மேலும் மாறிவரும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப மையங்களாக உயர்த்தப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி உதவித்தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். எனவே இந்த நேரடி சேர்க்கையில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களை 04142- 290273 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்