குண்டும், குழியுமாக மாறிய திண்டுக்கல்-நத்தம் சாலை

புதிதாக அமைக்கப்பட்ட திண்டுக்கல்-நத்தம் சாலை தரமாக அமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2023-05-11 19:00 GMT

நகரம், கிராமம் என ஊர்களின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது சாலை வசதி. அப்போது தான் மக்கள் எளிதில் அந்தந்த ஊர்களுக்கு செல்ல முடியும்.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் சாலை வசதி என்பது இன்றளவும் பல்வேறு கிராமங்களில் தன்னிறைவு பெறாத நிலையில் உள்ளது. குறிப்பாக மலைக்கிராமங்களில் இன்று வரையும் மண்பாதையே உள்ளது.

இதற்கிடையே திண்டுக்கல், நத்தம் ஆகிய 2 நகரங்களை இணைக்கும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து சாணார்பட்டி, கோபால்பட்டி, கணவாய்பட்டி வழியாக நத்தம் வரையில் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதனால் கிராமப்புற மக்களின் முக்கிய சாலை பயன்பாடாக திண்டுக்கல்-நத்தம் சாலை உள்ளது.

திண்டுக்கல்-நத்தம் சாலை

திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலை 31 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இந்த சாலை முன்பு 7 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி, வேன் என தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்த சாலையில் சென்று வந்தன. அதோடு கனரக வாகனங்களும் அந்த சாலை வழியாக தான் சென்று வந்தன.

நாளுக்குநாள் வாகன போக்குவரத்து அதிகமானதால் திண்டுக்கல்-நத்தம் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட தொடங்கியது. இதையடுத்து திண்டுக்கல்-நத்தம் சாலையை விரிவுபடுத்த வேண்டும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து 7 மீட்டர் அகலம் கொண்ட திண்டுக்கல்-நத்தம் சாலையை 10 மீட்டர் அகல சாலையாக மாற்றவும், அந்த சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் புதிதாக தரைப்பாலங்கள் அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர்.

ரூ.140 கோடியில்...

இதற்காக ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு திண்டுக்கல்-நத்தம் இடையே சாலையை விரிவுபடுத்தி புதிதாக தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. மேலும் நத்தத்தில் இருந்து திண்டுக்கல் வரை சாலையின் இடதுபுறம் பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நடந்து செல்வதற்காக 4 அடி அகலத்தில் பேவர்பிளாக் கற்கள் மூலம் நடைபாதை, கன்னியாபுரம் அருகே சுங்கவரி கட்டண மையம் ஆகியவையும் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்தது.

சாலையை விரிவுபடுத்துவதற்காக முதல்கட்டமாக திண்டுக்கல் முதல் நத்தம் வரை சாலையின் இருபுறமும் இருந்த மரங்கள் வெட்டப்பட்டன. அப்பகுதியில் இருந்த மின்கம்பங்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் மாற்றி நடப்பட்டன. 2020-ம் ஆண்டு தொடங்கிய இந்த பணி கொரோனா ஊரடங்கு காரணமாக சாலை அமைக்கும் பணி சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு முடிவடைந்தது. அதன் பின்னர் கடந்த ஓராண்டாக புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் தான் வாகனங்கள் சென்று வருகின்றன. சுங்கவரி கட்டண மைய பணிகள் இன்னும் நிறைவடையாததால் அந்த மையம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

குற்றச்சாட்டுகள்

இந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமாக அமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லேசான மழைக்கு கூட தாக்குப்பிடிக்க முடியாமல் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. தகவலறிந்ததும் அந்த குழிகளை மட்டும் மூடி தற்காலிக சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். திண்டுக்கல்-நத்தம் சாலையில் அவசியம் இன்றி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது என்பன உள்பட பல்வேறு மேலும் குற்றச்சாட்டுகளை சாணார்பட்டி, கணவாய்பட்டி, எரமநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

வெள்ளைகண்ணன் (சமூக ஆர்வலர், ஆவிளிப்பட்டி):- திண்டுக்கல்-நத்தம் இடையே விரிவுபடுத்தப்பட்ட சாலை செயல்பாட்டுக்கு வந்து ஓராண்டிலேயே சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. பாதயாத்திரை பக்தர்களுக்காக போடப்பட்ட நடைபாதை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் நடைபாதையில் பதிக்கப்பட்ட பேவர்பிளாக் கற்கள் சேதமடைந்துள்ளன. இதனை அதிகாரிகள் உடனே சீரமைக்க வேண்டும். மேலும் சாலை சேதமடைந்த இடங்களில் முழுமையான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாமல் தென்னை ஓலை தட்டிகளை வைத்தும், இரும்பு தடுப்பை வைத்தும் பாதையை மறைத்துள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

சுங்கவரி கட்டணம் வசூலிக்க கூடாது

வீரக்குமார் (வாடகை வாகன டிரைவர், கன்னியாபுரம்):- கன்னியாபுரம் சந்தானவர்த்தினி ஆற்றுப்பாலம் அருகே பல மாதங்களாக சாலை சேதமடைந்து சரிசெய்யாமல் சாலையின் குறுக்கே தடுப்பு வைத்துள்ளனர். அந்த இடத்தில் சாலையை சற்று உயரமாக அமைத்திருக்க வேண்டும். சாலையின் 2 பக்கமும் மேடு, நடுவில் தொட்டில் போன்ற அமைப்பில் அந்த சாலை உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்தில் சிக்குகின்றனர்.

மேலும் அந்த இடத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் குளம் போல் தேங்குகிறது. மேலும் கோபால்பட்டியில் இருந்து திண்டுக்கல் வரை அந்த சாலையில் கார், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தால் புதிய சாலையில் பயணம் செய்கிறோம் என்ற எண்ணமே யாருக்கும் வருவதில்லை. சாலை ஒரே சீராக இல்லாமல் பல இடங்களில் மேடு பள்ளமாக சீரற்ற நிலையில் உள்ளது. இந்த சாலைக்கு சுங்கவரி கட்டணம் வசூலிப்பது அவசியமற்றது.

4 வழிச்சாலையாக்க வேண்டும்

பாலகுரு (இரும்பு வியாபாரி, கோபால்பட்டி):- நத்தம்-மதுரை இடையே 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் திண்டுக்கல்-நத்தம் இடையேயும் 4 வழிச்சாலை அமைக்க வேண்டும். அப்படி செய்தால் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்பவர்கள் நத்தம் சாலையை பயன்படுத்துவார்கள். வெறுமனே சாலையை அகலப்படுத்தினால் மட்டும் பலனளிக்காது. தற்போது அகலப்படுத்தப்பட்ட சாலையும் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சேதமடைந்த நிலையில் உள்ளன. எனவே சாலையை தரமான முறையில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்