நீதிபதியின் நாக்கை அறுப்போம் என்று பேசிய திண்டுக்கல் காங்கிரஸ் தலைவர் கைது

ராகுல்காந்திக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதியின் நாக்கை அறுப்போம் என்று பேசிய, திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-10 19:00 GMT

ராகுல்காந்திக்கு சிறை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு, சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவுகள் சார்பில் ஆர்ப்பாட்டம், தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம், மறியல் ஆகிய போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே கடந்த 6-ந்தேதி காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு சார்பில் திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீதிபதிக்கு எதிரான பேச்சு

இதில் திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் கலந்து கொண்டு பேசினார். அப்போது ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதித்த சூரத் நீதிபதியின் நாக்கை அறுப்போம் என்று பேசியதாக கூறப்படுகிறது. நீதிபதிக்கு எதிராக அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் துரை மணிகண்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். நீதிபதிக்கு எதிராக பேசியதற்காக, குஜராத் மாநிலத்திலும் துரை மணிகண்டன் மீது புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு

இந்த சூழலில் திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் மீது திண்டுக்கல் வடக்கு போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அவரை போலீசார் எந்த நேரமும் கைது செய்யலாம் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே நீதிபதிக்கு எதிராக பேசியது தொடர்பாக துரை மணிகண்டன் விளக்கம் அளிக்கும்படி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவிட்டார்.

கைது

இந்த நிலையில் நேற்று துரை மணிகண்டனை போலீசார் கைது செய்யப்போவதாக தகவல் பரவியது. அடுத்த சில நிமிடங்களில், திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் துரை மணிகண்டன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர்.

பின்னர் கட்சி அலுவலகத்தில் துரை மணிகண்டன் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு நேற்று மதியம் வந்தனர். அங்கு போலீஸ் நிலையம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து நீதிபதிக்கு எதிராக பேசிய வழக்கில் துரை மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மீனாட்சி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை வருகிற 24-ந்தேதி வரை சிறையில் அடைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி மதுரை மத்திய சிறையில் துரை மணிகண்டனை போலீசார் அடைத்தனர்.

இந்த சம்பவத்தால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்