'தினத்தந்தி' செய்தி எதிரொலி: 18-ம் கால்வாய் தொட்டி பாலம் கட்டும் பணியை எம்.எல்.ஏ. ஆய்வு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கம்பம் அ்ருகே 18-ம் கால்வாய் தொட்டி பாலம் கட்டும் பணியை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்
கம்பம் பள்ளத்தாக்கு கிழக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு தண்ணீரின் மூலம் நேரடியாக நெல், வாழை, தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. மேற்கு பகுதியில் உள்ள உத்தமபாளையம், போடி வட்டத்தில் மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில் 18-ம் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் கூடலூர், கம்பம், பாளையம், தேவாரம் வழியாக சுத்தகங்கை ஓடை வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது கம்பத்தை அடுத்த ஊத்துக்காடு அருகே உள்ள 18-ம் கால்வாய் தொட்டி பாலம் உடைந்தது. இதையடுத்து பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றது. ஆனால் பணியில் தொய்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறினர். மேலும் இந்த பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்ைக விடுத்தனர்.
இதுதொடர்பான செய்தி கடந்த 20-ந்தேதி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், பொதுப்பணித்துறை அதிகாரியுடன் சென்று பாலம் கட்டும் பணியை இன்று ஆய்வு செய்தார். அப்போது எம்.எல்.ஏ. கூறுகையில், கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு வருகிற செப்டம்பர் மாதம் 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின் போது மஞ்சளாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் ரமேஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் உள்பட பலர் உடனிருந்தனர்.