'தினத்தந்தி' செய்தி எதிரொலி: கோத்தகிரியில் பழுதான நடைபாதை சீரமைப்பு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: கோத்தகிரியில் பழுதான நடைபாதை சீரமைப்பு

Update: 2023-02-15 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கல்பனா காட்டேஜ் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புப் பகுதிகளுக்கு பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் பேரூராட்சி நிர்வாகத்தால் பல ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த நடைபாதை பழுதடைந்து, அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்து பள்ளம் ஏற்பட்டது. எனவே இந்த நடைபாதை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து இப்பகுதி மக்கள் அந்த பள்ளத்தின் மேல் மரக்கட்டைகள், தகரத்தாலான கதவுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு பள்ளத்தை மூடி, தற்காலிகமாக நடைபாதையை சீரமைத்து அதன் வழியாக நடந்து சென்று வந்தனர். எனவே இரவு நேரத்தில் அதில் நடந்து செல்லும் பொதுமக்கள் தவறி விழுந்து காயங்கள் ஏற்படும் அபாயம் இருந்து வந்தது. இது குறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் அந்த இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில் இரும்பாலான கம்பிகளைக் கொண்டு பலமான நடைபாதை அமைத்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன், இது குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் வார்டு உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்