தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-28 20:02 GMT

விவசாயம் பாதிப்பு

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் பகுதியில் உள்ள மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக வைப்பாறு உள்ளது. தற்போது இந்த ஆற்றில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் ஆற்றின் நீர் வளம் பாதிக்கப்படுவதுடன் விவசாயம் போன்ற தொழில்வளங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வைப்பாற்றில் வளர்ந்துள்ள கருவேலமரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாமுவேல், சேத்தூர்.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் டி.டி.கே.ரோடு, ராமமூர்த்தி ரோடு, பாண்டியன்நகர், அல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் துரத்துவதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் சில நாய்கள் நோயுடன் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த நாய்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாசுதேவன், விருதுநகர்.

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாவடி தோப்பு பகுதிகளில் சாலை அமைப்பதற்காக அனைத்து தெருக்களிலும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பணி முடிவடையாமல் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கிழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இப்பகுதியில் சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவா, அருப்புக்கோட்டை.

வீணாகும் குடிநீர்

விருதுநகர் மாவட்டம் சேத்தூரில் இருந்து செட்டியார்பட்டி செல்லும் மெயின்ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வீணாக வெளியேறுகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் தேங்கிய தண்ணீர் வாகனஓட்டிகளால் நடைபாதையினர் மீது சிதறி பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலு, சேத்தூா்.

பஸ்வசதி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இருந்து மதுரைக்கு செல்ல காலை நேரத்தில் போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மாணவர்கள், வேைலக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காரியாபட்டி. 

Tags:    

மேலும் செய்திகள்