தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள், ஸ்ரீவில்லிபுத்தூர்.
குப்பைகள் அகற்றப்படுமா?
விருதுநகர் அருகே சூலக்கரையில் இருந்து தாதம்பட்டி செல்லும் சாலையில் குடியிருப்பு பகுதிகளின் அருகே குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதில் பெரும்பாலும் பிளாஸ்டிக்கழிவுகளே அதிகமாக உள்ளது. ஆதலால் குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை பேண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாயவன், சூலக்கரை.
நடவடிக்கை தேவை
விருதுநகர் மவாட்டம் சாத்தூரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணியால் சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சாலையில் இருந்து எழும் தூசியால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சாத்தூர்.
ஆபத்தான மின்கம்பம்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா கனஞ்சாம்பட்டி ஊராட்சி க.சத்திரப்பட்டி கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் என்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் ஒருவித அச்ச உணர்வுடனே இந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே சேதமடைந்த மின்கம்பத்தை விரைவாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாலிங்கம், வெம்பக்கோ3ட்டை.
சேதமடைந்த நிழற்குடை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இளந்தோப்பு அரசு மருத்துவமனை அருகே உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பெண்கள், குழந்தைகள் நீண்ட நேரம் வெயிலிலும், மழையிலும் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டித்தர வேண்டும். கருப்பையா, இளந்தோப்பு.