தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வீணாகும் குடிநீர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் ரெயில்வே பீடர் ரோடு அருகே செல்லும் சாலையில் பொதுமக்களின் குடிநீா் வசதிக்காக பொதுகுழாய் ஒன்று உள்ளது. இந்தநிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் இந்த குழாய் சேதமடைந்து நீரானது வீணாகி வருகிறது. வீணாகி வரும் நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு அடைந்து காணப்படுகிறது. எனவே சேதமடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும்.
ஸ்டீபன் ஜேசுதாஸ், ராஜபாளையம்.
நிழற்குடை வசதி
மதுரை மாவட்டம் விளாங்குடி பஸ் நிலையத்திற்கு தினமும் எண்ணற்ற பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மதுரையிலிருந்து விளாங்குடி செல்லும் பாதையில் பயணிகள் நிழற்குடை வசதி கிடையாது. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலிலும் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கவேண்டும்.
மாதவன், விளாங்குடி.
மாசடைந்து வரும் தெப்பக்குளம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அனுப்பங்குளம் பஞ்சாயத்து மீனம்பட்டி கிராமத்தில் தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பத்தின் தண்ணீரை பொதுமக்கள் குடிநீர் போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களாக இந்த தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதனால் தெப்பக்குளத்தின் நீரானது மாசடைந்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விநாயகமூர்த்தி, அனுப்பங்குளம்.
கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
மதுரை மாவட்டம் பார்க் டவுன் பாமாநகர் 1-வது தெருவில் 150 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பகுதியில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது. போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் இப்பகுதி பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் ெசன்று நீரை எடுத்து வருகிறார்கள். மேலும் பாம்புகள், விஷபூச்சிகள் போன்றவை நடமாடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
பொதுமக்கள், பாமாநகர்.
தடுப்பணை சுவர் சேதம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மூலக்கரைப்பட்டி வரத்து கல்வாயில் தண்ணீர் தேக்கி வைப்பதற்காக தடுப்பணை கட்டப்பட்டது. இந்நிலையில் அமைக்கப்பட்ட தடுப்பணையின் நடுவில் உள்ள சிமெண்டு சுவரில் இருந்த கற்களை சிலர் எடுத்து சென்று உள்ளனர். இதனால் தடுப்பணயைில் சிமெண்டு சுவர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. எனவே சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
சிவா, முதுகுளத்தூர்.
பூங்கா சீரமைக்க வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மருத்துவமனை ரோட்டில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் உள்ள உபகரணங்கள் அனைத்தும் உடைந்த நிலையில் உள்ளன. இதனால் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான கழிப்பறைகள் புதர் மண்டி காணப்படுகிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
தேவ், பரமக்குடி.
சேதமடைந்த நூலகம்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி சத்திரம் தெருவில் மக்கள் பயன்பாட்டிற்காக கிளை நூலகம் கட்டப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த நூலகத்தின் மேற்பகுதியானது சேதமடைந்து காட்சியளிக்கிறது. மேலும் சுவர்கள் விரிசல் அடைந்தும் காணப்படுகிறது. நூலகத்திற்கு வரும் மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒருவித அச்சத்துடனே படிக்கும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த நூலகத்தை சீரமைக்க வேண்டும்.
லுசியஸ், தொண்டி.
விபத்து அபாயம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி 39 வார்டுகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் நாள்தோறும் இப்பகுதியில் 20 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் குப்பைகளை லாரிகள் மூலம் அள்ளி செல்லும் போது தார்ப்பாய் கொண்டு மூடப்படாமல் கொண்டு செல்கின்றனர். இதனால் குப்பையானது காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்திற்குள்ளாகி வருகின்றது. இதனை அதிகாரிகள் கவனிப்பார்களா?
ராம், காரைக்குடி.
குண்டும், குழியுமான சாலை
மதுரை மாவட்டம் கட்ராபாளையம் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சேதமான சாலையில் கழிவுநீரானது தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆவதால் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் அதிக அளவில் பரவுகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதி சாலையை சீரமைக்க வேண்டும்.
ரபி, கட்ராபாளையம்.
குறைந்த மின்அழுத்தம்
சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரிநகரில் நாச்சியார், அதியமான், குமணன் தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மின்மாற்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் பழுதடைந்தது. வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மின்மாற்றிகளும் இல்லை. இப்பகுதியில் குறைந்த மின் அழுத்தத்தில் மின்சாரம் வினியோகிக்கப்படுவதால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுத்து சேதமான டிரான்ஸ்பார்மரை சரிசெய்து மின்வினியோகம் சீராக வினியோகிக்க வேண்டும்.
சிவாஜி, கோட்டையூர்.