தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வாருகால் வசதி தேவை
விருதுநகர் மாவட்டம் குல்லூர் சந்தை கிராமத்தில் சாலைவசதி, வாருகால் வசதி சரியாக இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் நீடிக்கிறது. மேலும் சாலை வசதி இல்லாததால் வாகனஓட்டிகள், நடைபாதையினர் சாலையில் பயணிக்க சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதிக்கு தேவையான வசதிகளை செய்துதர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
பொதுமக்கள், விருதுநகர்.
மருத்துவ வசதி மேம்படுத்தப்படுமா?
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு வேண்டிய மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். அவ்வாறு மேம்படுத்தினால் எண்ணற்ற கிராம மக்கள் பயன்பெறுவர்.
முத்துராமன், நரிக்குடி.
தண்ணீர் பற்றாக்குறை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது. இதனால் கண்மாயில் தண்ணீரை சேமிக்க முடியாமல் விவசாயம், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கண்மாயை ஆக்கிரமித்துள்ள கருவேலமரங்களை அகற்ற வேண்டும்.
மணிகண்டன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
நடவடிக்கை தேவை
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் அகத்தாகுளம் ஊராட்சி முத்தனேரி கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டம் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் அனைவருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், நரிக்குடி.
சாலை வசதி வேண்டும்
விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் பஞ்சாயத்து முத்துகுமாரபுரம் பகுதியில் சாலை வசதிகள் இல்லை. இதனால் வாகனஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்திதர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமேஷ், வெள்ளூர்.