தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-08-09 18:45 GMT

குறைந்த அழுத்த மின்சாரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா நகர், இந்திரா தெரு, மாதவன் தெரு, வள்ளுவர் தெருவில் இரவில் தொடர்ந்து குறைந்த அழுத்த மின்சாரம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்படும் நிலை உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி குறைந்த மின்னழுத்த பிரச்சினைகளை சரிசெய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

கண்ணன், காரைக்குடி.

ஆபத்தான பள்ளம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி மார்க்கெட் பின்புறம் உள்ள நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக பொதுமக்கள் சிலர் விழுந்து காயமடையும் நிலை தொடர்கதையாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து ஆபத்தான இந்த பள்ளத்தை மூடுவார்களா?

அஜீஸ்கான், தேவகோட்டை.

பொதுமக்கள் அவதி

சிவகங்கை நகர் பகுதிகளில் சிலர் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துகின்றனர். இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். மேலும் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பார்த்திபன், சிவகங்கை.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் காவலர் வீட்டு வசதி வாரியம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் தேங்கியபடி உள்ளது. இதனால் இந்த பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மக்களின் நலன்கருதி கழிவுநீர் தேங்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜசேகரன், காரைக்குடி.

அடிக்கடி ஏற்படும் மின்தடை

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்தடை அவ்வப்போது ஏற்படுகின்றது. நாளொன்றுக்கு 5 தடவைக்கு மேலாக அவ்வப்போது மின்தடை ஏற்படுகின்றது. இதனால் முதியோர், பொதுமக்கள், சிறு வணிகர்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரிசெய்ய வேண்டும்.

பொதுமக்கள், எஸ்.புதூர்.

Tags:    

மேலும் செய்திகள்