தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-07-05 21:25 GMT

கண்மாய் தூர்வாரப்படுமா?

மதுரை கருப்பாயூரணி கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் மேடாகி வருகின்றது. எனவே அதனை உடனடியாக தூர்வாரி மழை நீரை சேமித்து வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, கருப்பாயூரணி.

தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கால்வாய் சரிவர தூர்வாரப்படாத நிலை உள்ளது.இதனால் இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய்களை அவ்வப்போது தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீரராகவன், மதுரை.

போக்குவரத்து நெரிசல்

மதுரை அண்ணா பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பஸ் நிலையத்தில் இருந்து கோரிப்பாளையம் வழியாக செல்லும் பஸ்களை ஏவி மேம்பாலம் வரை செல்லவும், மற்ற வாகனங்கள் அரசு ஆஸ்பத்திரி ஒட்டியுள்ள சண்முகம் சாலை வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் குறையும். எனவே இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புமணி, மதுரை.

வாகன ஓட்டிகள் சிரமம்

மதுரை பழங்காநத்தம் பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் மிகவும் தாமதமாக நடக்கிறது. இதனால் இந்த வழியாக பயணிக்கும் வாகனஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே டி.பி.கே. ரோட்டில் சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவகுமார், பழங்காநத்தம்.

கூடுதல் பஸ்கள் தேவை

மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். தனியார் பஸ்கள் அதிக கட்டணத்தில் கோவை, திருப்பூர் நகரங்களுக்கு பயணிகளை ஏற்றி செல்கிறார்கள். எனவே விடுமுறை நாட்களில் கோவை, திருப்பூர் நகரங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுரிநாதன், ஆரப்பாளையம்.

குடிநீர் வசதி வேண்டும்

மதுரை மாவட்டம் மேலூர் சந்தைப்பேட்டையில் உழவர் சந்தை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தண்ணீர் வசதி இல்லை. இதனால் இங்கு வரும் குழந்தைகள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. எனவே அங்கன்வாடி மையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மேலூர்.

Tags:    

மேலும் செய்திகள்