'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பைகள் அகற்றப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் ஆங்காங்கே சாலையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சாலையோரத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமலை, பரமக்குடி.
கொசு தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள். குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
யாசர் அராபத், கீழக்கரை.
தொல்லை தரும் நாய்கள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதயகுமார், முதுகுளத்தூர்.
பஸ் நிலையம் அமைக்கப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் பஸ் நிலையம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். திருப்பாலைக்குடியில் வசிக்கும் மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள கிராம மக்களும் கிழக்குகடற்கரை சாலையில் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி திருப்பாலைக்குடியில் பஸ் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அஹமதுகான், திருப்பாலைக்குடி.
பயணிகள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் அதிகம் வருவதில்லை. கீழக்கரை முக்கு ரோடு வழியாக பஸ்கள் சென்று விடுகின்றன. இதனால் முதியோர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே கீழக்கரை பஸ் நிலையத்துக்கு புறநகர் பஸ்கள் அதிகம் வந்துசெல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்யது இப்ராஹீம், கீழக்கரை.