'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயணிகள் அவதி
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியிலிருந்து வாடிப்பட்டிக்கு குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் ஆட்டோ போன்ற வாகனங்களில் அதிக கட்டணம் செலுத்தி வாடிப்பட்டிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயநாதன், சோழவந்தான்.
தேங்கி நிற்கும் மழைநீர்
மேலூர் மேலவலசை கிராமத்தில் ஊரின் நடுவே மழைநீருடன் கழிவுநீரானது செல்ல வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கிய நீரில் கொசுக்கள் உருவாகி நோய்கள் பரவும் அபாய சூழலும் உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கதிரவன், மேலூர்.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
மதுரை திருமங்கலம் அருகே எஸ். வால்நாயக்கன்பட்டி கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி கற்க நகரத்திற்கு வந்து செல்கிறார்கள். வால்நாயக்கன்பட்டியில் இருந்து மதுரைக்கு குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் செல்கின்றன.. இதனால் இந்த கிராமத்தினர் போக்குவரத்திற்கு சிரமப்படுகிறார்கள். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தர், வால்நாயக்கன்பட்டி.
சமையலறை கட்டிடம் தேவை
மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியம் வடக்கத்தியான்பட்டியில் உள்ள பள்ளியின் சமையலறை கட்டிடம் இடிக்கப்பட்டு விட்டதால் தற்போது திறந்த வெளியில் சமையல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது..எனவே சமையலறை கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொதுமக்கள், சேடப்பட்டி.
மாணவர்கள் அவதி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் தெத்தூர் கிராமத்திலிருந்து சிறுதோப்பு செல்லும் சாலையானது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்பு, வாடிப்பட்டி.
நோய் தொற்று அபாயம்
மதுரை மாநகர் 70-வது வார்டு தாமஸ் குறுக்கு தெரு எண்ணெய் செக்கு வீதி அருகில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீரானது சாலையில் தேங்குகிறது. மேலும் கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உருவாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் பரவ வாய்ப்புள்ளது. எனவே இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை,
பொதுமக்கள் அவதி
மதுரை மாநகர் கண்ணேந்தல் சந்தனம் நகர் பகுதியில் தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேதமடைந்து மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி நடப்பதற்கே லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்களும் வாகனஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரிகரன், மதுரை
சாலை சரிசெய்யப்படுமா?
மதுரை மாநகர் கீழஅனுப்பானடி பஸ் நிறுத்தம் ரவுண்டானாவில் இருந்து சிந்தாமணி ரோடு வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் சிறு, சிறு விபத்துகளும் அடிக்கடி நிகழ்கிறது. எனவே இந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
பாதாள சாக்கடை சரிசெய்யப்படுமா?
மதுரை மாநகராட்சி 87-வது வார்டு அனுப்பானடி எச் பி காலனியில் பாதாள சாக்கடை பழுதடைந்து கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் குழந்தைகளும் அதிகம் உள்ளனர். எனவே பாதாள சாக்கடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
வீணாகும் குடிநீர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி 9-வது வார்டு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. எனவே உடைந்த குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுரிநாதன், தென்கரை