'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நிழற்குடை சீரமைக்கப்படுமா?
விருதுநகர் அருகே சின்ன மூப்பன்பட்டியில் உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் நிழற்குடையினுள் நிற்பதற்கே மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணி, சின்ன மூப்பன்பட்டி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே உள்ள சாலையில் கழிவுநீர் முறையாக வெளியேறி செல்ல வழியின்றி தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அந்தப்பகுதியில் வாருகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தளவாய்புரம்.
பாலம் வேண்டும்
விருதுநகர் மாவட்டம் தம்பிப்பட்டி கிராமத்தில் மலையடிவாரபகுதியில் விவசாயிகளின் விளைநிலங்கள் உள்ளன. விளைநிலங்களுக்கு செல்லும் வழியில் நீரோடை இருப்பதால் விவசாயிகள் தங்களின் விவசாய உபகரணங்களையும், விளைபொருட்களையும் நீரோடையை தாண்டி கொண்டு வர மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நீரோடையின் குறுக்கே பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரிமுத்து, தம்பிப்பட்டி.
மின்விளக்கு தேவை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கே.கே.நகர் 21-வது வார்டு பகுதியில் உள்ள சில தெருவிளக்குகள் சில நாட்களாக எரிவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் புதிய மின்விளக்குகள் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவிச்சந்திரன், திருத்தங்கல்.
வீணாகும் குடிநீர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம் தோணுகால் கிராமத்தில் தாமிரபரணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாகி அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் குழாயின் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரிமுத்து, தோணுகால்.
சேதமடைந்த சாலை
மதுரை கீரைத்துறை புதுமகாளிபட்டி ரோடு பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆதலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
சாலை சீரமைக்க வேண்டும்
மதுரை கே.கே. நகர் ஆர்ச் பகுதியில் இருந்து பால்பண்ணை சிக்னல் வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமலிங்கம், மதுரை.
தொல்லை தரும் நாய்கள்
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் அங்கு வரும் பயணிகளை அச்சுறுத்துவதுடன் சிலரை கடிக்கவும் செய்கிறது. எனவே பயணிகளுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோகரன், மதுரை.
தார்சாலை அமைக்கப்படுமா?
மதுரை மாவட்டம் 23-வது வார்டு கீழகைலாசபுரம் சித்திராகாரா தெரு சாலையின் இருபுறமும் சேதமடைந்து குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே இங்கே தார்ச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தனகுமார், மதுரை.
வேகத்தடை அமைக்கப்படுமா?
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பேரையூர் ரோட்டில் டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு வாகனங்கள் அதிவேகமாக செல்கிறது. இதனால் அதிக விபத்துகள் இந்த சாலையில் நடக்கிறது. பள்ளி மாணவிகள், பொதுமக்கள் சாலையை கடக்க அச்சப்படுகின்றனர். ஆகையால் சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், உசிலம்பட்டி.