'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-14 19:30 GMT

அடிப்படை வசதி தேவை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

சுகாதார சீர்கேடு

மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவில் அருகே உள்ள சில தெருக்களில் ஆங்காங்கே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறுபோல ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் வேண்டும்

மதுரை மாநகராட்சி 23-வது வார்டு கீழகைலாசபுரம் தாகூர் நகர் கண்மாய்கரை பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள ரேஷன்கடைக்கு சொந்த கட்டிடம் இல்லாமல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே, ரேஷன் கடை சொந்த கட்டிடத்தில் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சந்தனகுமார், மதுரை.

மதுக்கடை இடம் மாற்றப்படுமா?

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த கேசம்பட்டி கிராமம் அருகம்பட்டியில் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடையால் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே, இந்த மதுக்கடையை இடம் மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மேலூர்.

குடிநீரில் சாக்கடை

மதுரை மாநகராட்சி 22-வது வார்டு, விளாங்குடி சூசை நகர் பகுதிகளில் குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. இந்த குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குரு தியேட்டரிலிருந்து வைகை ஆறு காமராஜர் பாலம் வரை தெருவிளக்குகள் எரியவில்லை. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனோகரன், மதுரை.

Tags:    

மேலும் செய்திகள்