'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-01 20:59 GMT

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் பெரிய பேராலி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்னப்பேராலி கிராமத்தில் எண்ணற்ற குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கால்நடைகளை வளர்த்து அதில் இருந்து கிடைக்கும் வருவாய் மூலம் தங்களது குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இவர்கள் வீட்டில் வளர்க்கும் கோழிகளை காட்டுப்பூனைகள் கடித்து விடுகிறது. அதேபோல ஆடு, மாடு ஆகியவற்றையும் நாய்கள் கடிக்கிறது. இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பொிதும் பாதிக்கப்படுகிறது. கால்நடைகளை சேதப்படுத்தும் காட்டுப்பூனை, நாய் ஆகியவற்றை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகராஜன், பேராலி.

ஆபத்தான மரக்கிளை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் குடிநீர் தொட்டிக்கான மின்மோட்டார் உள்ளது. இந்த மோட்டாருக்காக செல்லும் மின்வயருடன் அப்பகுதியில் வளர்ந்துள்ள மரத்தின் கிளைகள் மோதி வளர்ந்துள்ளன. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குடிநீர் தொட்டிக்கான மின்வயருடன் வளர்ந்துள்ள கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.

கவுரிநாதன், தென்கரை.

சேதமடைந்த பள்ளி கட்டிடம்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள பழைய கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து கீேழ விழும் நிலையில் இந்த கட்டிடம் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

உடைந்த குடிநீர் தொட்டி

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் பஸ் வெளியே வரும் இடத்தில் பயணிகளின் தாகம் தணிப்பதற்காக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இ்ந்நிலையில் கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் இந்த தொட்டியின் அடிப்பகுதி சேதமடைந்தது. இதனால் இந்த குடிநீர் தொட்டியில் நீர் ஏற்ற முடியாத நிலை உள்ளது. ஆதலால் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் தவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த குடிநீர் தொட்டியை அகற்றி விட்டு புதிய தொட்டி வைக்க வேண்டும்.

செந்தில், ஆரப்பாளையம்.

விபத்து ஏற்படும் அபாயம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் பகுதியில் நாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. நாய்கள் துரத்துவதால் பலர் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். நாய்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் நாய்கள் வாகனங்களின் குறுக்கே பாய்வதால் சிறு, சிறு விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்வின்குமார், காரைக்குடி.

பக்தர்கள் சிரமம்

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி நரசிங்கம்பட்டி அருகே நரசிங்கநாதர் கோவிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்து பெரிய பள்ளங்களுடன் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த கோவிலுக்கு சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகமாக வருவர். இந்நிலையில் சேதமடைந்த சாலையால் பக்தர்கள், இப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பத்திரப்பதிவு அலுவலகமும் இப்பகுதியில் உள்ளதால் அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

சிவா, மதுரை.

ஆக்கிரமிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து அருப்புக்கோட்டை ெசல்லும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதிலும் குறிப்பாக காலை, மாலை நேரங்களில் சாலையில் பயணிப்பது என்பது சவாலாகவே உள்ளது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூர்த்தி, சாயல்குடி.

கூடுதல் பஸ் தேவை

சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டியிலிந்து குன்னத்தூர், உலகம்பட்டிக்கு போதுமான பஸ் இல்லை. இதனால் இந்த வழியாக பயணிக்கும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்கள் வெவ்வேறு பஸ்களில் மாறி, மாறி சென்று வருகின்றனர். இதனால் காலவிரயம் ஏற்பட்டு வேலைக்கு செல்லும் நேரமும் பாதிக்கப்படுகின்றது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதி, சிவகங்கை.

அரசு மருத்துவமனை வேண்டும்

மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பகுதியில் அரசு மருத்துவமனை கிடையாது. இதனால் நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், முதியவர்கள் சிகிச்சைக்காக பல கிலோ மீட்டர் தூரம் சென்றுவருகிறார்கள். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும்.

பாவாபுகர்தீன், சிலைமான்.

அடிப்படை வசதி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேட்டமலையில் சரியான சாலை, வாருகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தினமும் பல்வேறு வகைகளில் சிரமப்படுகிறார்கள். தார்ச்சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் இந்தப்பகுதியில் வர இயலாத நிலை உள்ளது. மேலும் சரியான வாருகால் வசதி இல்லாததால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அதிகாரிகள் இப்பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

சான்டோ, மேட்டமலை.

Tags:    

மேலும் செய்திகள்