'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கொசுத்தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் இரவில் பொதுமக்கள் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண்குமார், திருவாடானை.
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கமுதிக்கு மதிய வேளையில் இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. பயணிகள் காத்திருந்து பயணிக்கும் நிலை உள்ளது. இதனால் பெண்கள், முதியோர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் போக்குவரத்து சேவைகளை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறுமுகம், ராமநாதபுரம்.
குடிநீர் வசதி தேவை
ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் போதிய அளவு குடிநீர் வழங்கப்படாததால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே ரெயில் நிலையத்தில் தேவையான அளவு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
டாக்டர்கள் பற்றாக்குறை
ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டினம் கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் உள்ளது. இதில் 24 மணி நேர சேவையை குறிப்பிட்டுள்ளார்கள். இந்த சுகாதார நிலையத்திற்கு பல கிராமங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் தினமும் வருகின்றனர். இங்கு போதிய டாக்டர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே இங்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீனி ஜலாலுதீன், பெரியபட்டினம்.
குப்பைகளை அகற்ற வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நகர் பகுதியில் உள்ள ஒரு சில இடங்களில் சாலையில் குப்பைகள் ஆங்காங்கே அகற்றப்படாமல் உள்ளன. தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே குப்பைகள் தேங்காமல் அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தொண்டி.