தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-06-14 17:54 GMT

கழிவுநீர் கால்வாய் பணி விரைந்து முடிக்கப்படுமா?

கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் 4-வது வார்டில் கழிவுநீர் செல்லும் வகையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. அதற்காக ரோட்டின் ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு தளம் அமைக்காமல் ஓரத்தில் மட்டும் கான்கிரீட் சுவர் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கழிவுநீர் கால்வாய் நிர்ணயிக்கப்பட்ட தூரம் வரை பணி நடைபெறாமல் பாதியுடன் நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவ்வழியாக சென்றுவர மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் இரவில் நிலை தடுமாறி வாய்க்கால் பள்ளத்தில் விழுந்து காயமடைந்துள்ளனர். அதேபோல் அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தவிட்டுப்பாளையம்.

சீரமைக்கப்படாத பயணிகள் நிழற்குடை

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் அதியமான் கோட்டை, ஓலப்பாளையம் பிரிவு சாலை எதிரே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் நலன் கருதி பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த பயணிகள் நிழற்குடையில் சிமெண்டு அட்டை வேயப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகள் நிழற்குடையில் போடப்பட்டிருந்த சிமெண்டு அட்டைகள் உடைந்து விட்டது. மேலும் அங்கு அமரக்கூடிய வகையில் போடப்பட்டிருந்த கான்கிரீட் பலகைகளை சமூக விரோதிகள் எடுத்துச் சென்று விட்டனர். இதனால் பயணிகள் அந்த நிழற்குடையில் அமர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஷாலினி, புன்னம்சத்திரம்.

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்

சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மூலிமங்கலம் பிரிவு எதிரே உள்ள டாஸ்மாக் கடை அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இப்பகுதியில் செயல்பட்டு வரும் வாத்து கறிக்கோழி கடைகள் மற்றும் கோழிக் கடைகளில் உள்ள கழிவுகளையும், மருத்துவ கழிவுகளையும் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு வருகின்றனர். மேலும் பிளாஸ்டிக் கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் மருத்துவ மற்றும் கோழி கழிவுகளில் இருந்து துர்நாற்றம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு சென்று வருகின்றனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வரும் கழிவுகளை அகற்றி கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், மூலிமங்கலம் பிரிவு.

வேகத்தடை அமைக்க வேண்டும்

கரூர் மாவட்டம் பரமத்தி வேலூர்- கொடுமுடி செல்லும் சாலையில் சேமங்கி பெரியார் நகர் உள்ளது. இந்த பகுதியில் இருந்து கவுண்டன்புதூர் செல்லும் பிரிவு சாலை உள்ளது. இந்த கொடுமுடி செல்லும் தார் சாலை வழியாக ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் இரவு பகலாக சென்று வருகின்றன. இந்நிலையில் பெரியார் நகர் பகுதியில் தார் சாலை வளைவான நிலையில் உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன விபத்து தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. அதே போல் தார் சாலையில் சென்று கவுண்டன்புதூர் செல்பவர்கள் திடீரென கவுண்டன்புதூர் பிரிவு சாலையில் திருப்பும்போது எதிரே வரும் வாகனங்களும், பின்னால் வரும் வாகனங்களும் மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கவுண்டன்புதூர் பிரிவு சாலை எதிரே வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுரேஷ், பெரியார் நகர்.

Tags:    

மேலும் செய்திகள்