தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-02-12 19:16 GMT

மின்விளக்கு சரி செய்யப்படுமா?

அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது சேலத்தார்காடு, மு.புத்தூர் கிராமங்கள். இந்த கிராமங்களுக்கு செல்லும் முதன்மை சாலையான நாகமங்கலம் மற்றும் முனியங்குறிச்சி கிராமங்களுக்கு செல்லும் பிரிவு சாலையின் நுழைவாயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோலார் மின்விளக்கு ஒன்று (4 பல்புகள்) தனியார் சிமெண்டு ஆலை சார்பில் பொருத்தப்பட்டது. சில நாட்களாக இந்த சோலார் மின்விளக்கு எரிவதில்லை. நான்கு பல்புகளில் 2 பல்புகளை அகற்றிவிட்டனர். மற்ற 2 பல்புகளில் ஒன்று மட்டுமே தினமும் எரியாமல் விட்டு விட்டு எரிகிறது. இப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லை. நாகமங்கலத்திலிருந்து வி.கைக்காட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மின்னல் வேகத்தில் செல்வதால் முனியங்குறிச்சி சாலை வழியாக செல்லும் பொதுமக்களுக்கு விபத்துகள் ஏற்படும் மோசமான சூழ்நிலை உள்ளது. மேலும் இவ்வழியே செல்லும் கனரக வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் பலமுறை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட சிமெண்டு ஆலை நிர்வாகம் உடனடியாக பழுதடைந்துள்ள சோலார் மின் விளக்கை சரி செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அடிப்படை வசதிகள் வேண்டும்

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர், பெரியார் நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை வசதி மற்றும் கழிவுநீர் வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்