தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-11-30 18:02 GMT

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், கரூர் மாநகராட்சி 1-வது வார்டில் கோதூர் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வெங்கமேட்டில் இருந்து குளத்துப்பாளையம் வழியாக கரூர்-சேலம் தேசிய சாலையிலிருந்து கோதூர் செல்லும் சாலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு குண்டும், குழியுமாகவும், மழைபெய்யும்போது சேறும், சகதியுமாக உள்ளது. மேலும் கரூர் நகரில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து வரும் கழிவுகளை அந்த பகுதியில் கொட்டி விடுகின்றனர். இதேபோல் அந்த பகுதியில் டாஸ்மார்க் கடை உள்ளது. மது அருந்துபவர்கள் காலி பாட்டில்களை நடுரோட்டில் உடைத்து விடுகின்றனர். இதனால் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கோதூருக்கு செல்லும் சாலையில் பொதுமக்கள் நடமாடுவதற்கு அச்சமாகும், பயமாகவும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையோர பள்ளம்

கரூர் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சி, வெள்ளியணை கிளை நூலகம், 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் முன்பு சில மாததிற்கு முன் சாலையை அகலபடுத்தல் பணி நடைபெற்றது. பணி முழுமையாக முடிந்தநிலையில் சாலையின் இருபுறமும் சாலைக்கு மண்நிரப்ப பள்ளம் தோண்டப்பட்டது. சாலைக்கு மண் போடப்பட்டு உயர்த்தப்பட்ட நிலையில் ஏற்கனவே பள்ளமாக இருந்த இடம் மேலும் பள்ளமாக உள்ளது. இதனால் மழைபெய்யும் போது மழைநீர் செல்ல வழியின் தேங்கி நிற்கிறது. மேலும் சேறும், சகதியுமாக இருப்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நூலகம் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் அவசரகாலத்தில் உடனே எடுக்கமுடியாமல் சேற்றில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த அலுவலகம் முன்பு இரவு நேரத்தில் தெருவிளக்கு இல்லாமல் உள்ளதால் சில சமூக விரோதிகள் இரவு நேரத்தில் மது அருந்தி விட்டு தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

கரூர் மாவட்டம், புலியூர்- உப்பிடமங்கலம் செல்லும் சாலை ஓரத்தில் அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது மழை காலம் என்பதால் குப்பைகள் மழையில் நனைந்து இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வேகத்தடை அமைக்கப்படுமா?

கரூர் லைட் ஹவுஸ் குமரன் பள்ளி அருகே நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அதிக அளவில் வாகனங்கள் செல்வதால், அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. எனவே வேகமாக வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நிற்காமல் செல்லும் பஸ்கள்

கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு மற்றும் சுற்றப்பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வெளியூர் செல்ல வேண்டுமானால் ஆட்டையாம்பரப்பு பஸ் நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்துதான் பஸ் ஏறி வெளியூர் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பஸ் நிறுத்தத்தில் பெரும்பாலான பஸ்கள் நின்று செல்வது இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் குறித்த நேரத்திற்கு வெளியூர் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்லும் வகையில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

Tags:    

மேலும் செய்திகள்