தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-11-27 18:45 GMT

தெருநாய்களால் தொடரும் விபத்து

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டு சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எரியாத தெருவிளக்குகள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுகம்பூர் கிராமத்தில் இரவு நேரத்தில் பொதுமக்கள் சாலையில் நடமாட வசதியாக சாலையோரம் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த தெரு விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் இப்பகுதியில் நடமாட பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, டீ.களத்தூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால் கழிவுநீர் செல்ல வழி இன்றி தற்போது ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

திறக்கப்படாத கழிவறை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் கழிவறை கடந்த 2016-2017 ஆண்டு கட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த கழிவறையின் மேற்பகுதியில் கருவேல மரங்கள் படர்ந்தநிலையில் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நிழற்குடை வேண்டும்

பெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் ஒதியம், அசூர் பிரிவு சாலையில் பல கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பலதரப்பட்ட வியாபார மக்கள் இறங்கி உள் கிராமங்களுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு என இங்கு பயணிகள் நிழற்குடை இல்லாததால் அவர்கள் நீண்ட நேரம் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெயில், மழையில் நின்று பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்