தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-11-02 18:44 GMT

குப்பைகளுக்கு தீ வைப்பு

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள கிரீன்சிட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இவற்றை அகற்றாத காரணத்தினால் சமூக விரோதிகள் அவ்வப்போது இந்த குப்பைகளில் தீ வைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டு காற்று மாசு ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நேர கால அட்டவணை அமைக்க கோரிக்கை

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லும் நேரம் சம்பந்தமான கால அட்டவணை அமைக்கப்படாமல் உள்ளதால் வெளியூர் செல்லும் பயணிகள் பஸ் எப்போது வரும் என வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்க பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ் வந்து செல்லும் நேரம் குறித்து கால அட்டவணை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் ஊராட்சியில் செங்குணம், அருமடல், பாலாம்பாடி, சறுக்குபாலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 1,474 குடும்பங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தனி நபர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் நாள்தோறும் காலை 6 மணிக்கு எம்.எம்.எஸ். போட்டோ எடுக்கப்படுகிறது. இதனால் காலையில் சமைப்பது, தண்ணீர் எடுப்பது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட சிரமங்கள் பணியாளர்களுக்கு ஏற்படுகிறது. எனவே பழைய வழக்கப்படி வேலை நடைபெறும் இடத்தில் எம்.எம்.எஸ். போட்டோ எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது செங்குணம் ஊராட்சியில் எம்.எம்.எஸ். போட்டோ, பணி நடைபெறும் இடத்தில் எடுக்கப்படுகிறது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை‌ எடுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கு பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

நோய் தொற்று ஏற்படும் அபாயம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், வயலப்பாடி ஊராட்சி, வீரமநல்லூர் கிராமம், அம்பேத்கர் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நோய் தொற்றை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையின் குறுக்கே கழிவுநீர் தேங்கி நிற்பதினால் அதில் பொதுமக்கள் நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த நீர்த்தேக்க தொட்டி

பெரம்பலூர் மாவட்டம், வயலப்பாடி ஊராட்சி வயலப்பாடி கீரனூர் பஸ் நிறுத்தம் முன்பு கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் இந்த நீர்தேக்க தொட்டியின் கீழ் அமர்ந்து பஸ் ஏறி செல்கிறார்கள். இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் அதிகப்படியான உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்