தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி அம்பேத்கர்நகர் பகுதியில் ஸ்ரீரங்கம் ரெயில்வேகேட்- மயான சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கொள்ளிடம் ஆற்றுக்குடிநீர் ஏர்வால்வு தொட்டியின் சுற்றுச்சுவர் சிதிலமடைந்து விபத்து ஏற்படுத்து வகையில் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தொட்டியின் சுற்றுச்சுவரை சரிசெய்து மூடி அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
எலும்புக்கூடான மின்கம்பம்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, நாகமங்கலம் அருகே உள்ள மேக்குடி குடித்தெருவில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து எலும்புக்கூடுபோல் காட்சி அளிக்கிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பம் பொதுமக்கள் நடமாட்டத்தின் போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் சாலையோரம் செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதினால் கனரக வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது . எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மயானத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தப்படுமா?
திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம் வேம்பனூர் ஊராட்சி ஆதிதிராவிடர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கென அருகே உள்ள மயான கொட்டகைக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மயானத்திற்கு செல்லும் வழியில் ஆற்றை கடக்க வேண்டிய நிலை உள்ளதால் மழைக்காலங்களில் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்லும்போது உடலை எடுத்துச்செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குண்டும் குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு அருகில் உள்ள கணபதி நகரில் புதிதாக போடப்பட்ட சாலை ஆங்காங்கே சிதிலமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி தென்னூர் புது மாரியம்மன் கோவில் தெரு 28-வது வார்டு உட்பட்ட பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால் தூர்ந்துபோன நிலையில் கழிவுநீர் செல்ல வழி இன்று ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.