தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-01 18:30 GMT

பஸ்கள் நின்று செல்லாத நிழற்குடை

ஈரோடு -கரூர் செல்லும் சாலை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு செல்லும் பிரிவு சாலை எதிரே சுற்றுவட்டார பகுதியில் இருந்து பஸ்களுக்கு செல்லும் பொதுமக்கள் அமர்ந்து செல்வதற்காக அங்கு நிழற்குடை கட்டப்பட்டது. அந்த நிழற்குடையில் பொதுமக்கள் அமர்ந்திருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ் ஏறி சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இந்த நிழற்குடை உள்ள இடத்தில் எந்த பஸ்களும் நின்று செல்வதில்லை. அதன் காரணமாக பயணிகள் பஸ்கள் நின்று செல்லும் இடங்களுக்கு சென்று பயணித்து வருகின்றனர். இதனால் பயணிகள் நிழற்குடை பயனற்று போய்விட்டது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளிக்கூடமாக மாறிய சமுதாய கூடம்

கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி சார்பில் தோட்டக்குறிச்சி பகுதியில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு அந்த சமுதாயக்கூடத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு பல்வேறு விசேஷங்களுக்கு மிககுறைந்த வாடகைக்கு விட்டு வந்தனர். இந்நிலையில் தோட்டக்குறிச்சியில் இருந்த அரசு நடுநிலைப்பள்ளியின் ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டதன் காரணமாக அந்த பள்ளியில் இடிக்கப்பட்ட கட்டிடத்தில் பயின்ற மாணவ- மாணவிகளுக்கு இந்த சமுதாயக்கூடத்தில் பாடம் கற்பித்து வருகின்றனர். இதன் காரணமாக தோட்டக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்து வசதியற்ற பொது மக்கள் குறைந்த கட்டணத்தில் சமுதாயக்கூடத்தில் விசேஷங்கள் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் விசேஷங்கள் செய்யும் போது சமுதாயக்கூடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள் அவதி

கரூர்- ஈரோடு மெயின் ரோட்டில் இருந்து புன்னம் செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த சாலை வழியாக கார்கள், வேர்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், லாரிகள், இரு சக்கர வாகனங்கள் என நிறைய வாகனங்கள் சென்று வருகின்றன. தார் சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனதன் காரணமாக தார்சாலை நெடுகிலும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த தார்சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் நிலை தடுமாறி செல்கின்றன. இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே புன்னம் ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த தார் சாலையை சீரமைத்து விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயனற்ற சுகாதார வளாகம்

கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியில் அப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி புகழூர் வாய்க்கால் அருகே சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை அப்பகுதி பெண்கள் பயன்படுத்தி வந்தனர். சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சுகாதார வளாகம் சிதிலமடைந்தது. இதனால் பயன்படுத்தாமல் உள்ளனர். நீண்ட ஆண்டுகளாக சுகாதார வளாகத்தை பயன்படுத்தாததால் சுகாதார வளாகத்தை சுற்றி சீமைக்கருவேல மரங்கள் முளைத்து சுகாதார வளாகத்தை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சுகாதார வளாகத்தை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பராமரிக்கப்படாத சுகாதார வளாகம்

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், நா.பாளையத்தில் உள்ள பொது சுகாதார வளாகம் சரியான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்