தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
அரியலூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் விடுதிக்கு எதிரே சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கீழே விழும் நிலையில் உள்ள சுற்றுச்சுவர்
அரியலூர் சந்தைக்கு அருகே உள்ள செட்டிஏரியின் சுற்றுச்சுவர் சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்துடன் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வடிகால் வசதி வேண்டும்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா சிலையில் இருந்து சின்னவளையம் அரங்கனேரி வரை செல்லும் சாலையில் இருபுறமும் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கழிவுநீர் செல்லவும், மழை பெய்யும்போது மழைநீர் செல்லவும் வாய்க்கால் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தடை செய்யப்பட்ட நேரத்தில் செல்லும் வாகனங்கள்
அரியலூர் மாவட்டத்தில் கனரக வாகனங்களால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. மேலும் கடந்த 2016-ம் ஆண்டு பள்ளி வேன் மீது டிப்பர் லாரி மோதியதால் அகோர விபத்து நிகழ்ந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு அரியலூர் மாவட்ட நிர்வாகம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும் மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையும் கனரக வாகனங்கள் மற்றும் இதர கனரக வாகனங்கள் இயங்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் வி.கைக்காட்டிலிருந்து புத்தூர் கிராமத்தில் இயங்கும் சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு தடை செய்யப்பட்ட காலை நேரத்தில் கனரக வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது. இதோடு அல்லாமல் வி.கைகாட்டி பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தடை செய்யப்பட்ட நேரத்தில் கனரக வாகனங்கள் இயங்குகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதமும், போதிய பாதுகாப்பு இல்லை . எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வி.கைகாட்டியில் தடை செய்யப்பட்ட நேரங்களில் இயங்கும் கனரக வாகனங்கள் மற்றும் இதர கனரக வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சாலையோரம் தானியங்களை உலர வைப்பதால் மக்கள் அவதி
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் அரியலூர்-ஸ்ரீபுரந்தான் சாலையில் சாத்தம்பாடியில் இருந்து ஸ்ரீபுரந்தான் வரை சாலையின் ஓரங்களில் ஓரிரு தினங்களாக ஒரு சிலர் சூரியகாந்தி மற்றும் மக்காச்சோளம் போன்ற தானியங்களை உலர்த்தி காய வைக்கின்றனர் . இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.