தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-18 18:45 GMT

சேதமடைந்த சிமெண்டு பலகைகள் மாற்றப்படுமா?

கரூர் மாவட்டம், குளித்தலை ஆண்டார் மெயின் ரோடு தெருவில் இருந்து காங்கிரஸ் ரோடு தெருவிற்கு செல்லும் முகப்பு பகுதியில் கழிவுநீர் சாக்கடையின் மேல் பகுதி சிமெண்டு பலகை மற்றும் கான்கிரீட்டால் மூடப்பட்டிருந்தது. இதன் வழியாக பொதுமக்கள் நடந்தும், மோட்டார் சைக்கிளிலும் சென்று வந்தனர். இந்தநிலையில் சாக்கடையின் மேல் போடப்பட்டிருந்த காங்கிரீட் சிமெண்டு பலகையின் ஒரு பகுதி உடைந்து விட்டது. இந்த சிமெண்டிலான பலகை முழுமையாக உடையும் முன்பு, சேதம் அடைந்துள்ள இதை முழுமையாக அகற்றி புதிய சிமெண்டு பலகை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கழிவுகளால் மாசடையும் தண்ணீர்

கரூர் மாவட்டம், பாலத்துறை அருகே உள்ள புகழூர் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் ஓரத்தில் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு வகையான கடைக்காரர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை போட்டு வருகின்றனர். அதேபோல் இந்த வழியாக இறந்தவர்களை கொண்டு செல்லும்போது இறந்தவர்களின் தலையணைகள், மெத்தைகள், துணிமணிகள் மற்றும் இறந்த வீட்டில் போடப்பட்டிருந்த பந்தலில் இருந்த தென்னை மட்டைகள், செருப்புகள் என ஏராளமான பொருட்களை புகழூர் வாய்க்காலையொட்டி போட்டுச்செல்கின்றனர். காற்று, மழை அடிக்கடி பெய்து வருவதால் வாய்க்கால் ஓரத்தில் போடப்பட்டுள்ள கழிவுகள் வாய்க்காலுக்குள் விழுந்து தண்ணீர் மாசு அடைந்து வருகிறது. அதேபோல் வாய்க்கால் தண்ணீரை குடிக்கும் கால்நடைகளின் வாய்க்குள் பிளாஸ்டிக் கழிவுகள் சென்று கால்நடைகள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட் முதல் பெரியபாலம் பகுதி வரை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் குளித்தலை பஸ் நிலையம் முதல் பெரிய பாலம் வரையில் மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதுதவிர மற்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை எவ்வித நடவடிக்கையும் தற்போது வரை மேற்கொள்ளாமல் உள்ளது. எனவே முறையாக அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மக்கள்

கரூர் மாவட்டம், தேவர்மலை கிராமம் குருணி குளத்துப்பட்டி வடக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை வசதி மற்றும் வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும் போது மழைநீர் செல்ல வழி இன்றி சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கடைகள் முன்பு கொட்டப்படும் குப்பைகள்

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தரகம்பட்டியில் ஊர் பொதுமக்கள் நடமாடும் மெயின் ரோடு மற்றும் மருந்து கடை, புத்தகக் கடை முன்பு சிலர் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்